புதிதாக டூவீலர் வாங்குவோரிடம் ஹெல்மெட்டும் சேர்த்து விநியோகிக்க வேண்டும்: வாகன தயாரிப்பாளர்கள், டீலர்களுக்கு கமிஷனர் கடிதம்

சென்னை: தமிழகத்தில் நடக்கும் விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் புதிதாக டூவீலர் வாங்குவோரிடம் ‘ஹெல்மெட்’டும் சேர்த்து விநியோகிக்க வேண்டும் என வாகன தயாரிப்பாளர்கள், டீலர்களுக்கு போக்குவரத்து துறை கமிஷனர் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் விபத் துக்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2017ல் 65,562 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில், 16,157 பேர் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு 59 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ள நிலையில், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் இவ்வாறு ஏற்படும் விபத்துக்களும், அதில் சிக்கி இறப்போரின் எண்ணிக்கையும் வேதனையளிக்கும் ஒன்றாக இருக்கிறது.

இதை கட்டுப்படுத்த போக்குவரத்து துறை அதிகாரிகள் பல்வேறுவித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, கமிஷனர் சமயமூர்த்தி அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்கள், டீலர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக போக்குவரத்து துறை சாலை விபத்துக்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2018ல் நடந்த 33 சதவீத உயிரிழப்புகளில் 73 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியாமல் பயணித்திருப்பது தெரியவந்துள்ளது. 2018ம் ஆண்டில் சாலை விபத்தை குறைத்ததில் போலீஸ், நெடுஞ்சாலைத்துறை, மருத்துவம், போக்குவரத்து, போக்குவரத்து துறை, கல்வித்துறை சாதனை படைத்துள்ளது. இதில் புதிதாக வாகனம் வாங்குவோரிடம் விழிப்புணர்வு வழங்கிய டீலர்களுக்கும் பங்கு உள்ளது.

சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில் டூவீலர் ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும், கார் ஓட்டுவோர் சீட் பெல்ட் அணிய வேண்டும் என சாலை பாதுகாப்பு மையங்கள், ஆர்டிஓ அலுவலகங்களில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் சாலை பாதுகாப்பு கிளப்புகள் ஏற்படுத்தப்பட்டு, சிறப்பாக செயல்படுவோருக்கு பதக்கங்கள் வழங்கப்படுகிறது. மத்திய மோட்டார் வாகனச்சட்டப்படி புதிதாக வாகனம் வாங்குவோரிடம், ஹெல்மெட்டும் சேர்த்து விநியோகிக்க வேண்டும். எனவே தமிழகத்தில் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கும் வகையில் வாகன தயாரிப்பாளர், டீலர்கள் வாகனத்தை வாங்குவோரிடம், ஹெல்மெட்டும் சேர்த்து விநியோகிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: