மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் காசுக்குக் கட்டுப்பட்ட வாரியமாக மாறிப்போனது: தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

சென்னை: காவிரியில் கலக்கும் நொய்யல் கழிவுநீரால் மக்களுக்குப் பாதிப்பு மற்றும் பேராபத்து ஏற்பட்டுள்ள நிலையில் அதை கண்டுகொள்ளாமல் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் காசுக்கு கட்டுப்பட்ட வாரியமாக மாறிப்போனது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நல்லசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி ஆண்டுக்கு 25,000 கோடி அளவிற்கு அந்நிய செலாவனியை அரசுக்கு ஈட்டிக் கொடுக்கிறது. அதே நேரத்தில் சங்க இலக்கியங்களில் காஞ்சிநதி என்று பெருமையாகப் பேசப்பட்ட நொய்யல் ஆறு சாயக்கழிவால் செத்துப் போய்விட்டது.

நொய்யலின் குறுக்கே பாசனத்திற்காகக் கட்டப்பட்ட ஒரத்துப்பாளையம் அணையும் பாசனம்பெரும் 20,000 ஏக்கரும் பயனற்றுப்போயின. அணையைப் பாசனத்திற்குத் திறக்கக்கூடாது என விவசாயிகள் போராடியும், நீதி மன்றத்தின் தடை ஆணை பெற்றும், உள்ளனர். இதன் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக அணையில் நீர்த் தேக்கப்படுவதோ, பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதோ இல்லை. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் காசுக்குக் கட்டுப்பட்ட வாரியமாக மாறிப்போனது. பகலில் சாயக்கழிவுநீரைத் தேக்கி வைப்பதற்கும், நள்ளிரவில் அவற்றை திறந்து விடுவதற்குமே சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து நொய்யல் ஆற்றுநீர் தரையைத் தொடும் இடத்தில் தண்ணீரிலுள்ள உப்பின் அளவு 15 மட்டுமே. திருப்பூருக்குக் கீழே பழைய கோட்டைப் பகுதியில் உப்பின் அளவை அளவிடும்போது 7000, 8000 என கூடிவிடுகிறது. பயன்படாத இந்த நீரைக் கால்நடைகள் கூடக்குடிப்பதில்லை. ஆகவே  தமிழ்நாட்டில் ஓடும் ஒரே ஜீவநதி நொய்யலே ஆகும். இவ்வாறு நல்லசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: