தமிழகத்தில் பரவலாக மழை... கன்னியாகுமரியில் வெளுத்து வாங்கும் கனமழை... குற்றாலத்தில் களை கட்டும் சீசன்

குமரி: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் திடீரென மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. சின்னசேலம், கள்ளக்குறிச்சி சுற்றுவட்டார ஊர்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் தென்காசி, குற்றாலம், மற்றும் செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. வள்ளியூர், பனகுடி, பழுவூர், வடக்கன்குளம், காவல் கிணறு உள்ளிட்ட இடங்களில் சாரல் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நாமக்கல்லில் கொசவம்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.

இதே போல் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், தக்கலை, குளித்துறை உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் கன மழை வெளுத்து வாங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், குளச்சல், கோடிமுனை, குறும்பனை மீனவ கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் கடலுக்குசெல்லவில்லை. இதே போல நாகையில் கடலில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால், வேதாரண்யம், கீச்சாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

குற்றால சீசன்

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ளது. அதிகாலை முதல் சாரல் மழை பெய்வதால் ஐந்தருவியில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: