கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதை தடுக்க ஜி 20 நிதியமைச்சர்கள் மாநாட்டில் தீர்மானம்

புகோகா: கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட பெருநிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதை தடுக்க ஜி 20 நிதியமைச்சர் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள புகோகா நகரில் ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள், பங்கேற்ற 2 நாட்கள் மாநாடு நிறைவு பெற்றுள்ளது. மாநாட்டு முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் உலகப்பொருளாதாரம் மீண்டெழுந்தாலும் சர்வதேச வர்த்தக அரசியல் மோதல்கள் இன்னும் மந்தமான நிலையே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான், ஆப்பிள், கூகுள், பேஸ்புக், ஆகிய பெரு நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதை தடுக்க 2020-ம் ஆண்டுக்குள் ஒருங்கிணைந்த வரி விதிப்பு முறையை உருவாக்க ஜி 20 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில் பேசிய நிர்லா சீதாராமன் சர்வதேச அளவிலான வரி விதிப்பு மற்றும் இரட்டை விதிப்பு தவிர்ப்பு, வரி ஏய்ப்பு தடுப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப வரி கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார். தற்போது பெரும்பாலான நாடுகள் தற்காப்பு கொள்கையை பின்பற்ற தொடங்கியுள்ளன. இதனால் சர்வதேச அளவிலான வர்த்தகத்தை பெருமளவு பாதிப்பதாக அவர் தெரிவித்தார். 

Related Stories: