பிரதமர் மோடியின் விமானத்துக்காக பாக். வான்வெளியில் பறக்க அனுமதி கோரியது இந்தியா

புதுடெல்லி: எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்க செல்லும் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்பரப்பில் பறக்க மத்திய அரசு அனுமதி கோரியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கிர்கிஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு (எஸ்சிஓ) வரும் 13 மற்றும் 14ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி செல்லும் விமானம், பாகிஸ்தான் வான்பரப்பில் பறக்க அனுமதிக்க வேண்டுமென அந்நாட்டிடம் மத்திய அரசு அனுமதி கோரியிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 26ம் தேதி இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பாலகோட்டில் நுழைந்து ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.

அதிலிருந்து இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் பரப்பில் பறக்க அந்நாட்டு அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. இந்த தடையை பாகிஸ்தான் இதுவரை விலக்கிக் கொள்ளாததால், பிரதமர் மோடியின் விமானத்திற்கு சிறப்பு அனுமதி கோரப்பட்டுள்ளது. மொத்தம் 11 வழித்தடங்களில் தெற்கு பாகிஸ்தானில் உள்ள 2 வழிகளில் மட்டுமே தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. எஞ்சிய 9 வழித்தடங்களில் இன்னும் தடை நீடிக்கிறது. ஏற்கனவே கடந்த மாதம் 21ம் தேதி எஸ்சிஓ வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க சென்ற அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் விமானம் பாகிஸ்தான் வான் பரப்பில் பறக்க அந்நாட்டு அரசு சிறப்பு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தடையால் தவிக்கும் விமான நிறுவனங்கள்:

பாலகோட் தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் தங்களின் வான் பரப்பில் எதிரெதிர் தரப்பு விமானங்கள் பறக்க தற்காலிக தடை விதித்தன. இத்தடையை கடந்த மாதம் 31ம் தேதி மத்திய அரசு விலக்கிக் கொண்டது. ஆனாலும் பாகிஸ்தான் விதித்த தடை நீடிக்கிறது. இதனால், இந்திய விமான நிறுவனங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. பாகிஸ்தான் வான்பரப்பை பயன்படுத்த முடியாததால் இண்டிகோ விமானம் டெல்லி - இஸ்தான்புல் (துருக்கி) நேரடி விமானத்தை ரத்து செய்துள்ளது. இதேபோல டெல்லி - அமெரிக்காவுக்கு இடைநில்லாமல் இயக்கப்படும் ஏர்இந்தியா விமானமும் முடங்கி உள்ளது. இந்தியா தனது தடையை விலக்கினாலும், பாகிஸ்தான் தடை நீடிப்பதால் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது.

Related Stories: