மும்மொழி படிக்க வேண்டும் என குழந்தைகள் மீது திணிப்பது வன்முறை: வசந்திதேவி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்

இந்தியை பள்ளிகளில் கொண்டு வந்து திணித்து, எல்லா மாணவர்களையும் படிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால், நமக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று இல்லை. தமிழகத்தில் வேலைகளை தேடித் தான் மற்ற மாநிலங்களில் இருந்து பலர் வருகின்றனர். தமிழகம் எல்லா வழிகளிலும் அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. பொருளாதார ரீதியிலோ, அடிப்படை தேவையிலோ, கல்வியிலோ எதை எடுத்து கொண்டாலும் தமிழகம் வளர்ந்த மாநிலம் தான். இதனால், நாம் அங்கு செல்வதை காட்டிலும் அவர்கள் தான் இங்கு வருகின்றனர்.

எந்த மொழியையும் கற்றுக்கொள்ள கூடாது என்று கிடையாது. ஆனால், அதை பாடத்திட்டத்திற்குள் கொண்டு வந்து, 1ம் வகுப்பில் இருந்து இரண்டு மொழி, மும்மொழி படிக்க வைக்க வேண்டும் என்பது குழந்தைகள் மீது திணிக்கப்படும் வன்முறை. இந்த உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் தாய்மொழியை 6ம்வகுப்பு வரை படிக்கின்றனர். அதன்பிறகு அவர்கள் இரண்டாவது மொழியை தேர்ந்தெடுக்கின்றனர். நாங்கள் கூட 6ம் வகுப்பு வரை தாய்மொழியைத் தான் படித்தோம். 6ம் வகுப்புக்கு பிறகு தான் ஆங்கில மொழியை படிக்க ஆரம்பித்தோம். எங்களது காலகட்டத்தில் உள்ள பலரும் எல்லாத்துறையிலும் சிகரம் கண்டவர்கள்.

ஒரு மொழியை படிக்க வேண்டும் என்பதை விட, தானாக ஒரு இடத்திற்கு சென்றால் அந்த இடத்தில் மொழியை கற்றுக்கொள்ள முடியும். உதாரணத்திற்கு எனது டிரைவர் 6 மொழியில் பேசுவார். அவர் பள்ளிக்கே சென்றது இல்லை. மும்பை, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிற்கு சென்றுள்ளார். இந்தியாவில் இருந்து கொண்டே லண்டன் சென்றால் போதும். 6 மாதத்தில் ஆங்கில மொழியை கற்றுக்கொள்ள முடியும். எந்த ஊருக்கு மக்கள் செல்கிறார்களோ அந்த ஊரில் 6 மாதத்தில் கற்றுக்கொள்ள முடியும். மற்ற மாநிலங்களில் இருந்து இங்கு வந்து வேலை செய்தவர்கள் தமிழ் பேசுகின்றனர். அவர்கள் என்ன தமிழ் கற்க பயிற்சிக்கூடங்களுக்கா போனார்கள். இந்தி கற்றுக்கொள்வதை விட அது தானாகவே பரவ வேண்டும். அது இயற்கையாகவே பரவட்டும். இந்தியை படித்தால் தான் வாழ முடியும் என்ற சூழல் வரும் போது, அந்த கட்டத்தில் ஒருவர் தானாகவே இந்தி கற்றுக்கொள்ள முடியும். குழந்தைகள் மீது பல மொழிகளை திணிப்பதால் அவர்களால் அதை கற்றுக்கொள்ள முடியாது. மூன்று மொழியை படிக்க வைப்பதால் அவர்களால் அதில் மட்டுமே படிக்க கவனம் செலுத்த முடியும். மற்ற பாடத்திட்டத்தில் அவர்களால் கவனம் செலுத்த முடியாது. ஆங்கிலம் பயிற்று மொழி கொண்டு வருவதால் மிக,மிக மோசமான சூழ்நிலைகளை கொண்டு செல்லும். இப்போது அரசு பள்ளிகளில் கூட ஆங்கில பயிற்று வழிக்கல்வியை கொண்டு வந்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் ஆங்கில மீடியம் என்று போட்டிருந்தால் கூட ஆசிரியர்கள் தமிழில் தான் நடத்துகின்றனர். ஆனால், புத்தகம் ஆங்கிலத்தில் தான் உள்ளது. இதனால், மாணவர்கள் என்ன செய்வார்கள். எழுத்தாளர் ஆர்.கே.நாராயணன் ராஜ்யசபாவில்  பேசும்போது, இந்திய கல்வி கொள்கையின் சாபக்கேடு புரியாமை என்கிற கொடுமை என்றார். அவர் அன்று சொல்லிவிட்டு சென்றார். இன்று அதை விட கொடுமையாக உள்ளது. ஆகவே ஆங்கில பயிற்று மொழி என்பது இருக்க கூடாது. நாங்கள் படிக்கும் போதெல்லாம் 6ம் வகுப்பிற்கு மேல் ஆங்கிலம் தான் படித்தோம். நாங்கள் அப்போதெல்லாம் போட்டி தேர்வுகளை ஆங்கிலத்தில் எழுதினோம். அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்ற பிரபலங்கள் யாரும் ஆங்கிலத்தை பயிற்று மொழியாக படிக்கவில்லை. ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகத் தான் படித்துள்ளனர். அப்படித்தான் உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் இன்னொரு மொழியை படித்தனர். வசதியற்ற குழந்தைகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, நீங்கள் தோற்றுபோனவர்கள் என்று அவர்கள் நெற்றியில் சூடு போட்டு அவர்களை குழியில் தள்ளுவதற்கான முயற்சி தான் அது.

Related Stories: