பணகுடி பகுதியில் 10 நாளுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம்: பொதுமக்கள் பாதிப்பு

பணகுடி: பணகுடி பகுதியில் 10 நாளைக்கு ஓரு முறை குடிநீர் விநியோகிப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பணகுடி பேருராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன இதில் 40 ஆயிரத்திற்கும்அதிகமானோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் வீரபாண்டியன் மற்றும் பணகுடி பகுதியில் உள்ள கிணறுகளில் இருந்து குடிநீர் வருவது குறைந்ததால் தற்போது பணகுடி பகுதியில் 10 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமாக பணகுடி பேருராட்சி பகுயில் தற்போது வெறும் 4 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வழங்கபடுவதாக கூறப்படுகிறது.இதுகுறித்து பணகுடி மதிமுக நகர செயலாளர் சங்கர் கூறும்போது பணகுடி பகுதி தளவாய்புரம், அண்ணாநகர், ரோஸ்மியாபுரம், பாம்பன்குளம் உள்ளிட்ட பெரிய பகுதிகள் மேலும் சொக்கலிங்கபுரம் பாஸ்கராபுரம், சாமியார்குடியிருப்பு என அதிகளவு மக்கள் வசிக்கும் பகுதியாகும். ஒரு நாளைக்கு 17 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்குவதாக அதிகாரிகள் கூறி வருகின்றனர். ஆனால் 4 லட்சம் லிட்டர் தண்ணீர்தான் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் இப்பகுதியினர் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சேரன்மாதேவி பகுதியில் இருந்து வரும் குழாய்களில் பல இடங்களில் இன்னும் தண்ணீர் கசிந்துவருகிறது. இதை போர்க்கால அடிப்படையில் சீர்செய்யவேண்டும். இதுதொடர்பாக பலமுறை பேரூராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை .இதேபோல காவல்கிணறு ஊராட்சி பகுதியிலும் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்கதையாகியுள்ள நிலையில் நீரேற்று நிலையத்தில் உள்ள தண்ணீர் சேமிப்பு கிணற்றில் மக்கள் காலி குடங்களுடன் காத்திருக்கும் நிலை தொடர்கிறது.

Related Stories: