அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்: தனியார் கல்லூரிகள் ஊழியர்கள் சங்கம் மனு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பதிவாளர் குமார் மீது தனியார் கல்லூரி ஊழியர் கூட்டமைப்பினர் லஞ்ச ஒழிப்பு போலீசிடம் புகார் அளித்துள்ளனர். தரமற்ற 92 பொறியியல் கல்லூரிகளின் விவரங்களை, லஞ்சம் வாங்கிக்கொண்டு, பகிரங்கமாக வெளியிட மறுப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பதிவாளர் குமார், கல்லூரிகளின் அங்கீகாரக் குழு இயக்குநர் ஆகியோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசிடம் அகில இந்திய தனியார் கல்லூரி ஊழியர் கூட்டமைப்பை சேர்ந்த கார்த்திக் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது:தமிழகத்தில் உள்ள 537 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் நியமித்த குழு ஆய்வு மேற்கொண்டது. ஆய்வுக்குப் பின், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத, போதிய ஆசிரியர்கள் இல்லாத, தரமற்ற கல்லூரிகளாக 92 பொறியியல் கல்லூரிகள் செயல்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. 92 பொறியியல் கல்லூரிகளில், ஒரு சில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முழுவதுமாக நிறுத்தியும், ஒரு சில கல்லூரிகளில் பாதியாக குறைத்தும் அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டது.

92 கல்லூரிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகம் 92 கல்லூரிகள் என்று பொத்தாம் பொதுவாக அறிவித்தது கண்டனத்துக்குரியது. மாநிலம் முழுவதும் தற்போது பொறியியல் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சூழலில், மாணவர்கள் நல்ல, தரமான கல்லூரிகளை தேர்வு செய்யும் வகையில், போதிய வசதிகள் இல்லாத கல்லூரிகள் எவை எவை என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தரமற்ற, தகுதியற்ற 92 தனியார் பொறியியல் கல்லூரிகளின் பெயர் மற்றும் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடாமல் இருப்பது தவறு. இது 92 தனியார் கல்லூரிகளிடமும் லஞ்சம் பெறுவதற்கான முயற்சி. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் ஆகியோர் கல்லூரிகளின் பெயர் மற்றும் முழு விவரங்களை வெளியிட மறுப்பதற்கான பின்னணி குறித்து ஆராய வேண்டும்.

ஊழல், லஞ்சம், கருப்பு பணம் புழக்கம், முறைகேடுகளுக்கு இது காரணமாக அமையும். அதனால் 92 கல்லூரிகளின் நிர்வாகங்களிடம் முதல்வர்கள், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பதிவாளர் குமார் ஆகியோர் கருப்பு பணத்தை லஞ்சமாக பெற்றனரா என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரிக்க வேண்டும். மேலும் தகுதியற்ற 92 பொறியியல் கல்லூரிகளின் விவரங்களை பகிரங்கமாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேள்வி எழுப்பியும் கல்லூரிகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து கல்லூரியை தேர்வு செய்ய காத்திருக்கும் 1.33 லட்சம் மாணவர்களுக்கு குறிப்பிட்ட 92 கல்லூரிகள் எவை என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: