விபத்தில் இருந்து ரயில் மற்றும் பயணிகளை காப்பாற்றிய டிரைவர்களுக்கு டிஐஜி பாராட்டு

சென்னை: விபத்தில் இருந்து ரயில் மற்றும் பயணிகளை காப்பாற்றிய டிரைவர்களை ரயில்வே டிஐஜி பாலகிருஷ்ணன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி மார்க்கமாக கடந்த 1ம் தேதி காலை 6.20 மணிக்கு மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு ரயில் மெதுவாக புறப்பட ஆரம்பித்தவுடன் தண்டவாளத்தில் சுமார் 25 கிலோ எடையுள்ள கல் வைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த டிரைவர் காமராஜ், உடனடியாக ரயிலை நிறுத்தினார். பின்னர், கீழே இறங்கிவந்து தண்டவாளத்தில் இருந்த கல்லை அப்புறபடுத்தினார். இதேப்போல், கடந்த 4ம் தேதி பிற்பகல் 2.20 மணியளவில் வேளச்சேரி ரயில் நிலையத்தில் உள்ள 3வது தண்டவாளத்தில் இரும்பு துண்டுகள் வைக்கப்பட்டிருப்பதை கண்ட டிரைவர் சுரேஷ்குமார், உடனடியாக அதை அப்புறப்படுத்தினர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து டிரைவர்கள் தங்களுடைய உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விட்டு வழக்கம் போல் ரயிலை இயக்கினர்.   

    

இந்த சம்பவங்கள் குறித்து ரயில்வே போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர். இந்நிலையில் ரயிலுக்கும், பொதுமக்களுக்கும் எந்தவிதமான பாதிப்பின்றி ரயிலை இயக்கிய காமராஜ் மற்றும் சுரேஷ்குமார் ஆகிய இருவரையும் நேற்று ரயில்வே டிஐஜி பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார். மேலும் ரயில் பயணிகள் 24 மணி நேரமும் காவல் உதவி மைய தொலைபேசி எண்ணை (1512) தொடர்பு கொண்டு பாதுகாப்பு சம்பந்தமாக புகார் அளிக்கலாம். 9962500500 என்ற வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்தார்.

Related Stories: