ஆயுஷ் இடங்களுக்கு நீட் கூடாது: டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்

சென்னை: நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் கலந்து கொண்டார். பின்னர் டாக்டர் ரவீந்திரநாத் நிருபர்களிடம் கூறியதாவது:

நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு கோரி, தமிழக சட்டமன்றத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதலை இதுவரை மத்திய அரசு பெற்றுக் கொடுக்கவில்லை. மாநில அரசும் போதிய அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுக்க வில்லை. உயிரிழந்த மாணவியரின் குடும்பத்தினருக்கு, தமிழக அரசு  தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

மேலும், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுர்வேதா, யுனானி, சித்தா, ஓமியோபதி உள்ளிட்ட படிப்புகளுக்கு நீட் தேர்விலிருந்து மத்திய அரசு விலக்கு வழங்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்புகளில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். தமிழக அரசு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சியை தரமானதாக வழங்கவில்லை. பயிற்சி மையங்களின் தரத்தையும்,அரசுப் பள்ளிகளின் தரத்தையும் தமிழக அரசு உடனடியாக மேம்படுத்த வேண்டும். இவ்வாறு டாக்டர் ரவீந்திரநாத் கூறினார்.

Related Stories: