முகிலன் காணாமல் போன வழக்கு விசாரணையில் துப்பு கிடைத்துள்ளது: சிபிசிஐடி ஐகோர்ட்டில் தகவல்

சென்னை: சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் வழக்கு விசாரணையில், துப்பு கிடைத்துள்ளதாக சிபிசிஐடி காவல் துறையினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஹென்றி திபேன்  என்பவர் தாக்கல் செய்த மனுவில், சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மாயமாகி 112 நாட்கள் கடந்துவிட்டது. எனவே, அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், முகிலனை  கண்டுபிடிக்கும் பணி மற்றும் விசாரணை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சிபிசிஐடி போலீசுக்கு உத்தரவிட்டது.

வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிடும்போது, ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு தொடர்பான  ஆவணங்களை வெளியிட்ட இரு தினங்களுக்குள் முகிலன் மாயமாகிவிட்டார். அவரை விரைவில் கண்டுபிடித்து தருமாறு உத்தரவிட வேண்டும் என்றார். அப்போது, முகிலன் வழக்கு விசாரணையின் நிலை அறிக்கையை சிபிசிஐடி போலீசார்  சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்தனர். அறிக்கையை பதிவு செய்த நீதிபதிகள், காணாமல்போன முகிலன் வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், போலீசாருக்கு இதுகுறித்த துப்பு கிடைத்துள்ளதாகவும், அதை வெளியில்  கூறினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், இந்த விஷயத்தில் போலீசாருக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் கோரப்பட்டுள்ளதால்  விசாரணை 3 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: