அம்பை-கல்லிடை ஆற்றுபாலம் அருகே உயிர்பலி வாங்க காத்திருக்கும் மரணகுழி

அம்பை: அம்பை-கல்லிடை ஆற்றுபாலத்தில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் மரணகுழியால் வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி-அம்பாசமுத்திரத்திற்கும் இணைப்பாக செயல்படுவது தாமிரபரணி ஆற்றுப்பாலம். இந்த வழியாகத்தான் பாபநாசம் கோயில், சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்வார்கள். பாலம் வழியாக தினமும் அரசு மற்றும் தனியார் பஸ், லாரி, கார், பைக் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இரவு பகல் எந்நேரமும் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். மேலும் இப்பகுதியில் ஆற்றில் தண்ணீர் எப்போதும் வற்றாமல் சென்று கொண்டிருப்பதால் கோடைகாலமான இந்த நேரத்திலும் ஏராளமான உள்ளூர், வெளியூர் மக்கள் வாகனங்களில் வந்து குளித்து செல்கிறார்கள். அத்தனை சிறப்பு பெற்ற அம்பை-கல்லிடை பாலத்திற்கு சோதனை காலம் இது.

கல்லிடைக்குறிச்சியில் ஆரம்பிக்கும் பாலத்தின் முன்பகுதியின் ஓரத்தில் பெரிய பள்ளம் உள்ளது. நீண்டகாலமாக இருக்கும் இந்த பள்ளத்தை இதுவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. உயிர்பலி வாங்க துடிக்கும் மரண குழியில் அடிக்கடி ஆட்ேடாக்கள் கவிழ்ந்துள்ளன. டூவீலர்களும் தப்பவில்லை. இந்த வழியாக அரசு உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், விஐபிக்கள் சென்று கொண்டுதான் உள்ளனர். ஆனால் இதுவரை அந்த குழியை மூட நடவடிக்கை எடுக்கவில்லை. பெரிய அளவில் உயிர் பலி நடக்கும் முன் உடனடியாக மரண குழியை மூடவேண்டும் என்பதே இப்பகுதி மக்கள் மட்டுமின்றி வாகன ஓட்டிகளின் கோரிக்கையாகும்.

Related Stories: