படிவம் 16 வழங்க கெடு தேதி மாற்றம் வருமான வரி தாக்கலுக்கு அவகாசம் நீட்டிக்கப்படுமா?

புதுடெல்லி: நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு படிவம் 16 வழங்குவதற்கான கெடு தேதியை ஜூலை 10ம் தேதி வரை வருமான வரித்துறை நீட்டிப்பு செய்துள்ளது. மாத சம்பளம் வாங்குவோர் ஆண்டுதோறும் ஜூலை 31ம் தேதிக்குள் அபராதம் இன்றி வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம். இதற்கு படிவம் 16 அவசியம். நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கடந்த 2018-19 நிதியாண்டுக்கான படிவம் 16 வழங்குவதற்கான கெடு தேதியை வரும் 15ம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 10ம் தேதியாக வருமான வரித்துறை நீட்டித்துள்ளது. இதுபோல் நிறுவனங்கள் டிடிஎஸ் விவரங்களை படிவம் 24 கியூ-வில் கடந்த மாதம் 31ம் தேதிக்குள் சமர்ப்பித்திருக்க வேண்டும். இந்த கெடு தேதியும் வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

24 கியூ படிவத்தில் மே இறுதியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இதில் கூடுதல் விவரங்கள் கோரப்பட்டது இதை கருத்தில் கொண்டு கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக டிடிஎஸ் தாக்கல் செய்த பிறகு படிவம் 16 பதிவிறக்கம் செய்ய 7 நாள் முதல் 15 நாள் வரை கூட ஆகிவிடும். எனவே, சம்பளதாரர்கள் அபராதம் இன்றி தாக்கல் செய்வதற்கான கெடு ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: