ஷவ்வால் மாத பிறை தெரிந்தது தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை: தலைமை காஜி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நேற்று ஷவ்வால் மாத பிறை தெரிந்ததையடுத்து இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் அய்யூப் அறிவித்துள்ளார். முஸ்லிம்கள் ஆண்டுதோறும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருப்பார்கள். இந்த ஆண்டு கடந்த மாதம் 7ம் தேதி ரமலான் நோன்பு தொடங்கியது.

நேற்றுடன் 29 நாட்கள் ஆகிறது. இதையடுத்து நேற்று மாலை பிறை பார்க்கப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசின் தலைமை காஜி முப்தி முகமது சலாவுதீன் அய்யூப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் இன்று (நேற்று) மாலை ஷவ்வால் மாத பிறை தெரிந்ததையடுத்து நாளை (இன்று) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இன்று தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களிலும், ஈதுகா எனப்படும் திடல்களிலும் ரம்ஜான் நோன்புப் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெறும். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வார்கள். முன்னதாக முஸ்லிம்கள் சதக்கத்துல்பித்ரு எனும் ஏைழகளுக்கான உதவியை செய்வார்கள்.

Related Stories: