திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் ஊழல், பசி இல்லாத சமூகம் அமைய வேண்டும்: துணை ஜனாதிபதி விருப்பம்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்த துணை ஜனாதிபதி வெங்கய்யநாயுடு, ஊழல், பசி இல்லாத சமூகம் அமைய வேண்டும் என்று தெரிவித்தார். இந்திய துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு 3 நாள்  பயணமாக நேற்று திருப்பதி வந்தார். திருப்பதி அருகே நேற்று நடந்த தேசிய வானிலை ஆராய்ச்சி மைய நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், `நம் நாட்டின் முக்கிய வளமான விவசாயத்தை  காக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வாழ்வாதாரமாக உள்ள விவசாயத்தில் பருவநிலை மாற்றத்தை தெரியப்படுத்துவதில் இந்த அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இங்குள்ள விஞ்ஞானிகள் தங்களுடைய சிறந்த  ஆராய்ச்சிகள் மூலமாக நம் நாட்டு விவசாயத்துக்கு சிறந்த சேவை அளிக்க வேண்டும். நமது நாடு உலக அளவில் அறிவியல் ஆராய்ச்சிகளில் முன்னேற்றம் அடைந்து வருகிறது’ என்றார்.

இதைதொடர்ந்து நேற்றிரவு திருப்பதி பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கினார். இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு  தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு வெளியே அவர் நிருபர்களிடம் கூறியதாவது:ஆண்டுக்கு ஒருமுறை ஏழுமலையானை தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி இன்று குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தேன். முக்கிய பிரமுகர்கள் ஆண்டுக்கு ஒருமுறை  மட்டும் இங்கு சுவாமி தரிசனத்திற்கு வரவேண்டும். இதன்மூலம் சாதாரண பக்தர்களுக்கு எந்தவித சிரமமும் இருக்காது. ஊழல், பசி இல்லாத சமூகம் அமைய வேண்டும்.நான் அரசியலில் இல்லை. மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணமும்  இல்லை. ஐக்கிய நாடுகளின் சபையில் பங்கேற்று உலக அமைதிக்காகவும், வன்முறையை ஒழிக்கவும் மக்கள் கருத்துக்களை கேட்டு அதற்கு ஏற்ப செயல்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறேன். தீவிரவாதம் ஒழியவும், உலக அமைதி,  இயற்கை, கலாச்சாரம் பாதுகாக்கவும் சுவாமியை வேண்டிக்கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: