ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பன்நோக்கு சிகிச்சை மையம்: அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பன்நோக்கு சிகிச்சை மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு சிகிச்சை மையங்கள் மதுரை மற்றும் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது  மருத்துவமனையில் ₹15 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ேநற்று திறந்து வைத்தார்.பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:மூன்றாம் பாலினத்தவர்கள் மற்ற நோயாளிகளை போலவே எல்லா நாட்களிலும் இந்த மையங்களில் சிகிச்சை பெற்று கொள்ளலாம். இந்த சிறப்பு பிரிவில் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மருத்துவர், நாளமில்லா சுரப்பிகள் மருத்துவர், பால்வினை  நோய்க்கான மருத்துவர், மனநல மருத்துவர் அடங்கிய சிறப்பு குழு செயல்படும்.

இதை தவிர்த்து 3ம் பாலினத்தவர்களுக்கான பாலின மாற்று அறுவை சிகிச்சை இந்த மருத்துவமனையில் செய்யப்படும். 2016ம் ஆண்டு முதல் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 17 பேருக்கு பாலின மாற்று அறுவை  சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் ₹1.34 கோடி மதிப்பீட்டில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கான கருவிகள் வழங்கப்பட்டு இந்த மையம் விரைவில் மேம்படுத்தப்படும்.உரிய தகுதியின் அடிப்படையில் 3ம் பாலினத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், 3ம் பாலினத்தவர்கள் 2 பேர் பணியாற்றி வருகின்றனர். தஞ்சாவூர் அரசு பொது  மருத்துவமனையில் அவுட் சோர்சிங் முறையில் 10 பேர் விரைவில் பணியமர்த்தப்பட உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.முன்பாக, 3ம் பாலினத்தவர்களுக்கு அனைவரும் ஆதரவளிப்போம் என்று அமைச்சர்,  மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துமனை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் உறுதி மொழி  எடுத்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: