நிலத்தடி நீரை சேமிக்க கடும் கட்டுப்பாடு ஒரு ஒன்றியத்துக்கு 5 ஆழ்துளை கிணறு மட்டுமே அமைக்க நிர்வாகம் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவுவதாலும் நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டதாலும் நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில் ஒரு ஒன்றியத்துக்கு 5 ஆழ்துளை கிணறுகள் மட்டுமே அமைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ஆழ்துளை கிணறுகள் உள்ளன. ஆனால் அவற்றில் ஆயிரக்கணக்கான ஆழ்துறை கிணறுகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. மற்றவை நிலத்தடி நீர் இல்லாமை, பராமரிப்பு இல்லாத காரணத்தால் மக்கள் பயன்படுத்துவதில்லை.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் பருவமழை பொய்த்துபோனது, ஏரிகள், அணைகள்,நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாராதது போன்ற காரணங்களால் குடிக்கவும் பிற தேவைகளுக்கும் தண்ணீர் இல்லாமல் மக்கள் அல்லல் படுகின்றனர். இந்நிலையில் கிராமங்களில் தண்ணீர் பிரச்னையை போக்க ஒரு ஒன்றியத்தில் அதிக மக்கள் உள்ள இடம் என 5 பகுதிகளை தேர்வு செய்ய வேண்டும். அந்த இடத்தில் மட்டுமே ஆழ்துளை கிணறுகளை அமைக்க வேண்டும். அதற்கு மேல் ஒரு ஒன்றியத்தில் அமைக்கக் கூடாது. அதற்கு மேல் அமைத்தால் நிலத்தடி நீர் இன்னும் மோசமான நிலைக்கு சென்றுவிடும் என்பதால் அரசு இந்த கட்டுப்பாடு விதித்துள்ளது.

காஞ்சிபுரத்தை பொறுத்தவரை ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், காஞ்சிபுரம், புனிததோமையர்மலை, வாலாஜாபாத், திருப்போரூர், உத்திரமேரூர், திருக்கழுகுன்றம், காட்டாங்கொளத்தூர், மதுராந்தகம், லத்தூர், அச்சிறுபாக்கம், சித்தாமூர் ஆகிய 13 ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இந்த 13 ஒன்றியங்கள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் தலா 5 ஆழ்துளை கிணறு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு ஒன்றியத்தில் 5 ஆழ்துளை கிணறு அமைக்கலாம். அதற்கு மேல் அமைத்தால் நிலத்தடி நீர் இன்னும் மோசமான நிலைக்கு சென்றுவிடும்.

Related Stories: