சென்னை: சன் மியூசிக் சார்பில் ‘புகையிலையை ஒழித்து இசையை ரசியுங்கள்’ என்ற விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பார்வையாளர்களுக்கு புகையிலை ஒழிப்பு தொடர்பாக ஒரு சிறிய முயற்சியை சன் மியூசிக் சேனல் முன்னெடுத்துள்ளது. சிகரெட் அட்டை போன்ற ஒரு பெட்டியில் சிகரெட்டிற்கு பதில் புல்லாங்குழலை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. சிகரெட் பெட்டிக்குள் புல்லாங்குழலை வைத்தது, தோற்றத்தில் அது சிகரெட்டை ஒத்திருப்பது போன்ற காரணத்தினாலும் புல்லாங்குழலை இசைக்கும்போது அது நுரையீரலுக்கு ஒரு சிறந்த பயிற்சியை கொடுக்கும் என்பதாலும்தான். சிகரெட்டால் பாதிக்கப்பட்ட நுரையீரல் புல்லாங்குழல் இசைப்பதன் மூலம் பலப்படும். மேலும் புல்லாங்குழல் இசைப்பதன் மூலம் உடல் திறன் மேம்படுவதோடு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும்.