ஆசிரியர் பயிற்சி படிப்புகளில் சேர்வதற்கான தகுதி மதிப்பெண்களை அதிகரித்து அரசாணை வெளியீடு: தமிழக அரசு அதிரடி

சென்னை: ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான தகுதி மதிப்பெண்களை அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் இனி தேர்ச்சி மதிப்பெண் மட்டும் பெற்றால் ஆசிரியர் பயிற்சி படிப்புகளில் சேர முடியாது. குறைந்தது 45 விழுக்காடு மதிப்பெண் பெற வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் பொதுப்பிரிவினருக்கு 50 விழுக்காடாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆசிரியர் பயிற்சி படிப்புகள், பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ள நிலையில் நேற்று ஒரு முக்கியமான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், தரமான ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை அதிகரித்துள்ளது.

ஏற்கனவே எஸ்.சி., எஸ்.டி மாணவர்கள் பயிற்சி படிப்புக்கான தேர்வில், தேர்ச்சி பெற கூடிய அளவில் மதிப்பெண்கள் பெற்றால் போதும் என இருந்தது. ஆனால் தற்போது அந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ஆசிரியர் பயிச்சி படிப்புகளில் சேர விரும்பினால், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 45 விழுக்காடு மதிப்பெண் பெற வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அரசாணை நடப்பு கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல பி.சி., உள்ளிட்ட பொதுப்பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்  50 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. முக்கியமாக, அடுத்த ஆண்டு முதல் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் 30%-திற்கும் குறைவாக மாணவர்கள் சேர்க்கை இருந்தால் அந்த பள்ளியை மூடிவிட வேண்டும் என்ற ஒரு அதிரடி உத்தரவையும் தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

Related Stories: