கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் உற்சாகம் மலர் கண்காட்சியுடன் கோடை விழா துவக்கம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் 58வது கோடை விழா மலர் கண்காட்சியுடன் கோலாகலமாக துவங்கியது. ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஆண்டுதோறும் மே 2ம் வாரம் சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் பல்வேறு அரசு துறைகள் சார்பில் கோடை விழா, மலர் கண்காட்சி நடத்தப்படும். இந்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்ததால் மாவட்ட நிர்வாகம் மே 30ம் தேதி 58வது கோடை விழா, மலர் கண்காட்சி துவங்கும் என்று அறிவித்தது.

இதன்படி, கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடை விழா, மலர் கண்காட்சியுடன் நேற்று துவங்கியது. கலெக்டர் வினய் தலைமை வகித்தார். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், துரைக்கண்ணு மலர் கண்காட்சியை துவக்கி வைத்தனர். கலை நிகழ்ச்சிகளை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் எஸ்பி சக்திவேல், அரசு அதிகாரிகள், சுற்றுலாப்பயணிகள் கலந்து கொண்டனர். கண்காட்சியில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் மலர்களால் வடிவமைக்கப்பட்ட நந்தி, கிளி, ஒட்டகச்சிவிங்கி, மயில் மற்றும் கார்ட்டூன் கதாபாத்திரங்களான மோட்டு - பட்லு, ஸின்சான் இடம் பெற்றுள்ளன. மேலும் பல லட்சம் மலர்கள் மற்றும் காய்கறிகளால் அமைக்கப்பட்ட உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மலர் கண்காட்சி ஜூன் 3ல் முடியவுள்ளது. பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என ஜூன் 8 வரை கோடைவிழா நடைபெறவுள்ளது.

பேட்டிக்கு ‘நோ’

விழா முடிந்ததும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வெல்லமண்டி நடராஜனிடம் நிருபர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால் 2 பேருமே பேட்டி கொடுக்க மறுத்து அங்கிருந்து சென்று விட்டனர்.

Related Stories: