ஜனாதிபதி மாளிகையில் கோலாகல விழா பிரதமராக மோடி பதவியேற்றார்

* 24 கேபினட் அமைச்சர்கள்

* 9 பேருக்கு தனிப்பொறுப்பு

* 24 பேர் இணை அமைச்சர்கள்

* அமைச்சரானார் அமித் ஷா

* தமிழகத்துக்கு இடமில்லை

புதுடெல்லி, மே 31: ஜனாதிபதி மாளிகையில் நேற்று கோலாகலமாக நடந்த பதவி ஏற்பு விழாவில், தொடர்ந்து 2வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து 24 கேபினட் அமைச்சர்களும், தனி பொறுப்புடன் கூடிய 9 இணை அமைச்சர்களும், 24 இணை அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அமைச்சரவையில் தமிழகத்துக்கு  வாய்ப்பு அளிக்கப்படவில்லை.  நாட்டின் 17வது மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில், பாஜ மட்டும் 303 இடங்களுடன் தனிப்பெரும்பான்மை வெற்றி பெற்றது. இதன் மூலம், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சியை தக்க வைத்தது. இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் நேற்று இரவு கோலாகலமாக நடந்தது.

விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாஜ மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, எதிர்க்கட்சி தலைவர்களான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள், பாஜ மூத்த தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் என 8 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

மேலும், இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா, வங்கதேச அதிபர் அப்துல் ஹமித், நேபாள பிரதமர் கே.பி.ஒலி உள்ளிட்ட பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்கள், மொரிசியஸ், கிர்கிஸ்தான் நாட்டு பிரதமர்கள் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்றனர். பதவி ஏற்பு விழாவையொட்டி ஜனாதிபதி மாளிகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், சிறப்பு அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தன. சரியாக இரவு 7 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விழாவை தொடங்கி வைத்தார். முதல் நபராக, நாட்டின் 15வது பிரதமராக மோடி பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்து, கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மோடியை அடுத்து, ராஜ்நாத் சிங்,  அமித்ஷா, நிதின் கட்கரி உள்ளிட்டோர் மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். பாஜ தேசிய தலைவரான அமித்ஷா முதல் முறையாக மத்திய அமைச்சராக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

உடல்நலக் குறைவால் மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லியும், வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜூம் இம்முறை அமைச்சரவையில் இடம் பெறவில்லை. மற்றபடி, கடந்த முறை அமைச்சராக இருந்த பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன், ரவிசங்கர் பிரசாத், ஸ்மிருதி இரானி, ஹர்ஷ்வர்தன், பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான், முக்தர் அப்பாஸ் நக்வி, கிரிராஜ் சிங் உள்ளிட்டோர் மீண்டும் அமைச்சரவையில் இடம் பெற்றனர். அதே போல, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், அகாலி தளத்தின் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகிய கூட்டணி கட்சி தலைவர்களும் மத்திய அமைச்சராக பதவிஏற்றனர்.  முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளரான ஜெய்சங்கரும் மத்திய அமைச்சராக பதவி ஏற்றார். மொத்தம் 24 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். கிரண் ரிஜிஜூ, ஜிதேந்திரா சிங், பத் நாயக், ராவ் இந்திரஜித் உள்ளிட்ட 9 பேர் தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாகவும், வி.கே.சிங், கேரள பாஜ தலைவர் முரளீதரன் உள்ளிட்ட 24 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.

அமைச்சரவையில் தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், பாஜ.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக.வுக்கு ஒரு இணை அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழகத்தில் அதிமுக தரப்பில் வெற்றி பெற்ற ஒரே எம்பி.யான தேனி வேட்பாளரும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்துக்கு இப்பதவி கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகின. அதற்கேற்றார் போல், ரவீந்திரநாத்தும் நேற்று டெல்லி சென்றிருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் அவருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதே போல், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக பதவி வகித்த மேனகா காந்திக்கு இம்முறை வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இவரை மக்களவை இடைக்கால சபாநாயகராக நியமிக்க பாஜ தலைமை முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மொத்தம் 57 அமைச்சர்களுடன் பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையின் பதவி ஏற்பு விழா இரவு 9 மணிக்கு நிறைவடைந்தது. இதையடுத்து, 3,000 சிறப்பு விருந்தினர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரவு விருந்து அளித்தார். இதில் பல்வேறு சிறப்பு உணவுகள் பரிமாறப்பட்டன.

அமைச்சரவையில் இடம் பெறாதவர்கள்

கடந்த முறை முக்கிய பொறுப்புகளில் மத்திய அமைச்சராக இருந்தவர்களில் இம்முறை இடம் பெறாதவர்கள்: அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், அனுப்பிரியா படேல், உமாபாரதி, ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், மேனகா காந்தி, சுரேஷ் பிரபு, ஜெயந்த் சின்கா, ஜேபி நட்டா ஆகியோர் ஆவர். இவர்களில் அருண் ஜெட்லி, சுஷ்மாவும், உமாபாரதியும் உடல் நலக்குறைவால் அமைச்சரவையில் இடம் பெறவில்லை. மேனகா காந்தி இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட உள்ளார். ஜேபி நட்டாவுக்கு பாஜ தேசிய தலைவராக பதவி தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேபினட் அமைச்சர்கள்

1. ஸ்ரீ ராஜ்நாத் சிங்

2. ஸ்ரீ அமித் ஷா

3. ஸ்ரீ நித்ய ஜெய்ராம் கட்காரி

4. ஸ்ரீ டி. வி. சதனாந்த கவுடா

5. திருமதி. நிர்மலா சீதாராமன்

6. திரு ராமிலாஸ் பாஸ்வான்

7. ஸ்ரீ நரேந்திர சிங் தோமர்

8. ஸ்ரீ ரவிசங்கர் பிரசாத்

9. திருமதி. ஹர்சிம்ரத் கவுர் பாடல்

10. ஸ்ரீ தாவார் சந்த் கெலோட்டட்

11. டாக்டர். சுப்ரமணியம் ஜெய்சங்கர்

12. ஸ்ரீ ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்

13. அர்ஜுன் முண்டா

14. Smt. ஸ்மார்ட் ஜுபின் ஈரானி

15. டாக்டர். ஹர்ஷ் வர்தன்

16. ஸ்ரீ பிரகாஷ் ஜவேத்கர்

17. ஸ்ரீ பியுஷ் கோயல்

18. ஸ்ரீ தர்மேந்திர பிரதான்

19. திரு. முக்தர் அப்பாஸ் நக்வி

20. ஸ்ரீ பிரஷ்ஹாத் ஜோஷி

21. டாக்டர். மகேந்திரநாத் பாண்டே

22. ஸ்ரீ அர்விந்த் கணபதி சாவந்த்

23. ஸ்ரீ கிரிராஜ் சிங்

24. ஸ்ரீ கஜேந்திர சிங் ஷெகாவத்

இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு)

1. ஜிதேந்திர சிங்

2. கிரண் ரிஜிஜூ

3. ஹர்தீப் சிங் புரி

4. மன்குஷ் எல்.மால்டாவியா

5. பிரல்கத் சிங் படேல்

6. ராஜ்குமார் சிங்

7. ராவ் இந்தர்ஜித் சிங்

8. சந்தோஷ் குமார் கேங்வார்

9. ஸ்ரீ பத் யஸ்ஸோ நாயக்

இணை அமைச்சர்கள்

1. வி.கே.சிங்

2. முரளீதரன்

3. ராமதாஸ் அதுவாலே

4. அர்ஜூன் ராம் மேக்வால்

5. அனுராக் சிங் தாகூர்

6. அஸ்வினி குமார் சவுபே

7. பாபுல் சுப்ரியோ

8. அங்காடி சுரேஷ் சென்னபாசப்பா

9. தன்வே ராவ்சாஹிப  தாதாராவ்

10. தியோத்ரி சஞ்சய் சாம்ராவ்

11. பக்கன் சிங் குலஸ்தி

12. கிசன் ரெட்டி

13. கைலாஷ் சவுபே

14. கிருஷண் பால்

15. நித்யானந்த் ராய்

16. புருஷோத்தம் ருபாலா

17. பிரதாப் சந்திர சாரங்கி

18. ரத்தன் லால் கட்டாரியா

19. ரமேஷ்வர் தெலி

20. ரேணுகா சிங் சருதா

21. சாத்வி நிரஞ்சன் ஜோதி

22. சஞ்சீவ் குமார் பல்யான்

23. சோம் பிரகாஷ்

அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மாநிலங்கள்

உத்தரப் பிரதேசம் - 10

மகாராஷ்டிரா - 7

மத்தியப் பிரதேசம் - 5

பீகார் - 6

கர்நாடகா - 4

அரியானா - 3

குஜராத் - 3

ராஜஸ்தான்    - 3

ஜார்க்கண்ட்    - 2

ஒடிசா - 2

பஞ்சாப் - 2

மேற்கு வங்கம் - 2

அருணாச்சல பிரதேசம் - 1

அசாம் - 1

சட்டீஸ்கர் - 1

டெல்லி - 1

கோவா - 1

இமாச்சல் - 1

காஷ்மீர் - 1

தெலங்கானா - 1

உத்தரகாண்ட் - 1

* தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து யாரும் அமைச்சரவையில் இடம் பெறவில்லை.

Related Stories: