ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு கிடக்கும் 1,416 ஏரிகள்

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில், கடும் வறட்சியால் 1,416 ஏரிகளும் முற்றிலும் வறண்டு பாலைவனமாக காட்சியளிக்கிறது. இது, மேலும் குடிநீர் பிரச்னை ஏற்படுத்தும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.நாட்டு மக்களுக்கு எதை எதை எல்லாம் ஒரு அரசு இலவசமாக வழங்க வேண்டுமோ அவை எல்லாம் காசு கொடுத்து பயன்படுத்தும் சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அம்மா குடிநீர் என்ற பெயரில் அரசு நீரை விற்று கல்லாக்கட்டிக்  கொண்டிருக்கும் அவலம் எந்த மாநிலத்திலும் நிகழ்ந்ததில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில், 1,416 ஏரிகள் உள்ளன.  இம்மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்தும் நீர் வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படாததால், அனைத்து ஏரிகள் வறண்டு  கிடக்கிறது.இந்த ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து கால்வாயில் முள் செடிகள் மற்றும் பாலிதீன் கவர்கள் கொட்டி கிடப்பதால் மழை நீர் ஏரிக்கு வர வழியில்லாத நிலை உள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், நீர்வரத்து கால்வாய்களை சீர்  செய்யுங்கள் என விவசாயிகளும் கோரிக்கை விடுக்கின்றனர். அதற்கு அதிகாரிகளும், சரி செய்து விடுவோம், நிதி கிடைக்கவில்லை, வந்ததும் தூர் வாரப்படும் என சம்பிரதாயத்திற்காக பதில் கூறுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.  விளைவு மழையின்போது அதன் நீரானது ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு செல்வதில்லை. ஆங்காங்கு தேங்கி வீணாகிறது.

மழைக்காலங்களில் நீரை சேமிக்க தவறுவதால் நிலத்தடிநீர் குறைந்து கடும் வறட்சியை சந்திக்கும் நிலை தொடர்கிறது. இந்த நிலத்தடிநீரை நம்பி, ஒரு லட்சத்து 72,499 ஹெக்டேர் விவசாய நிலங்கள் உள்ளன.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘’ஏரி மதகுகளில் உள்ள ஷட்டர்கள் சேதமடைந்து ஆண்டுக்கணக்காகி விட்டன. இதை திறக்கவோ, அடைக்கவோ முடியாத நிலை இருப்பதால் சிறிதளவு தேங்கும் தண்ணீரும் வீணாகிறது. உலக  வங்கியிடம் கடன் வாங்கி ஏரிக்கரைகளை மட்டும் சீரமைத்தனர், நீர்வரத்து கால்வாய்களை கண்டு கொள்ளவில்லை.  எனவே, இனிவருங்காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க ஆறுகளை இணைப்பது, ஏரிகளுடன் நீர்வரத்து  கால்வாய்களை இணைப்பது உள்ளிட்ட விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டிய நடவடிக்கைகளை  அரசு உடனே தொடங்க வேண்டியது அவசியம்’’ என்றனர்.

Related Stories: