தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்; பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம்

* நெல்லையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

* புதுக்கோட்டையில் பெண்கள் திரண்டு போராட்டம்

* உளுந்தூர்பேட்டை அருகே அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

நெல்லை: தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடிவரும் நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சங்கரன்கோவில் அடுத்த கிராமத்தை சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கிராமத்தில் கடுமையாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வருவதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஒரு குடம் தண்ணீரை 20 ரூபாய் தொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுவிட்டதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

மானூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தாமிரபரணி ஆற்று நீரை தங்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார். இதேபோல் புதுக்கோட்டையில் நிலவிவரும் குடிநீர் பற்றாக்குறையை நீக்க கோரி இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையை அடுத்த வெள்ளையூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். அவர்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த போராட்டத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: