கோயில் நிர்வாகத்தில் காணப்படும் குறைபாடுகளை களைய பணியாளர், அர்ச்சகர்கள் உடன் 4 மாதத்திற்கு ஒரு முறை சீராய்வு கூட்டம்: கமிஷனர் பணீந்திரரெட்டி அறிவுரை

சென்னை: கோயில் நிர்வாகத்தில் காணப்படும் குறைபாடுகளை களைய பணியாளர், அர்ச்சகர்கள் உடன் 4 மாதத்திற்கு ஒரு முறை சீராய்வு கூட்டம் நடத்த வேண்டும் என்று கமிஷனர் பணீந்திரரெட்டி அறிவுரை வழங்கியுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 40,190 கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதான கோயில்கள் அடக்கம். இக்கோயில்களில் துப்புரவு பணியாளர், அர்ச்சனை டிக்கெட் வழங்குபவர், எழுத்தர், அர்ச்சகர் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த ஊழியர்கள் தங்களது குறைகளை தெரிவிக்க தனித்தனியாக ஒவ்வொரு முறையும் செயல் அலுவலர்களை சந்திக்க வேண்டியுள்ளது. பல பகுதிகளில் 10 கோயில்களுக்கு ஒரு செயல் அலுவலர் நியமிக்கப்பட்டு இருப்பதால், அவர்கள் மாதம் ஒரு முறை தான் வருகின்றனர். அவ்வாறு வரும் அலுவலர்கள் கோயில் கணக்கு விவரங்களை சரிபார்ப்பது, நிலம், கட்டிடம் வாடகைக்கு மற்றும் குத்தகைக்கு விடுவதும், நகை, சொத்துக்கள் பராமரிக்கப்படுகிறதா என்றும் ஆய்வு செய்து விட்டு சென்று விடுகின்றனர். இதனால், ஊழியர்கள் தங்களது குறைகளை தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி அறிவுரையின் பேரில் மண்டல இணை ஆணையர்கள் கோயில் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், ‘கோயில்களில் பணிபுரியும் பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் பொருட்டும், கோயில் நிர்வாகத்தில் காணப்படும் குறைபாடுகளை களைய ஏதுவாக கோயில் அர்ச்சகர், பணியாளர்கள் உடன் கோயில் அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகள் காலாண்டிற்கு ஒரு முறை சீராய்வு கூட்டம் நடத்த வேண்டும்.

சீராய்வு கூட்ட நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட இணை ஆணையர்/உதவி ஆணையர்களுக்கு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து கோயில் அலுவலர்கள் மற்றும் ஆய்வர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது. சீராய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்படும் குறைகளை சட்ட விதிகளுக்குட்பட்டு நிவர்த்தி செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: