ஊட்டியில் மலர் கண்காட்சி 3 நாட்களில் ஒருலட்சம் பேர் வருகை

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனின் முக்கிய நிகழ்ச்சியான மலர் கண்காட்சி 17ம் தேதி தொடங்கியது. இந்த 3 நாட்களில் மட்டும் சுமார் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் ஊட்டி வந்தது தெரியவந்தது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடை சீசன் களை கட்டியுள்ள நிலையில்  முக்கிய நிகழ்ச்சியான 123-வது மலர் கண்காட்சி கடந்த 17ம் தேதி தொடங்கியது. கண்காட்சியை முன்னிட்டு பூங்கா நுழைவு வாயில் பகுதியில் பல்வேறு வண்ண மலர்களால் ஆன 10க்கும் மேற்பட்ட அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியில் 1.50 லட்சம் கொய்மலர்களை கொண்டு ‘நாடாளுமன்ற கட்டிடத்தின்’ மாதிரி அமைக்கப்பட்டிருந்தது. இதுதவிர இளைஞர்களை கவரும் வகையில் மலர்களால் ஆன ‘செல்பி ஸ்பாட்’ அமைக்கப்பட்டிருந்தது. அலங்கார ேமடைகளில் கார்னேசன், ரோஜா மலர்கள், ஆர்கிட் மலர்களும் வைக்கப்பட்டுள்ளன. சுமார் 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மலர் கண்காட்சி நாளை வரை (21ம் தேதி) வரை நடைபெற உள்ள நிலையில், ஞாயிற்றுகிழமையான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள், தாவரவியல் பூங்காவில் குவிந்தனர். தொடக்க நாளன்று குழந்தைகள் உட்பட 24 ஆயிரத்து 671 சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். இரண்டாவது நாளான்று 35 ஆயிரத்து 984 சுற்றுலா பயணிகளும், மூன்றாவது நாளான நேற்று 40 ஆயிரம் சுற்றுலா பயணிகள் என மூன்று நாட்களில் சுமார் ஒரு லட்சம் பேர் பூங்காவை பார்த்து ரசித்து சென்றுள்ளனர். கண்காட்சி இன்னும் இரண்டு நாட்கள் நடைபெறும் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை பல மடங்கு அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: