கலை, அறிவியல் பட்டதாரிகளுக்கு ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் படிப்பு அறிமுகம்: அரசிதழில் வெளியீடு

சென்னை: பிளஸ்2 முடித்த மாணவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்லும் வகையில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் கல்வியியல் படிப்பு(பி.எட்) அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசிதழில் வெளியாகியுள்ள அறிவிப்பு: பிளஸ்2 தேர்வுக்கு பின், இளநிலை பட்டம் பெற்ற பிறகு பி.எட் படிக்க வேண்டும் என்ற நடைமுறை அமலில் உள்ள நிலையில், தற்போது ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் படிப்புக்கான விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. பிற நாட்டு ஆசிரியர் கல்வி நடைமுறைகளோடு ஒப்பிடப்பட்டு இந்த 4 ஆண்டு படிப்பு அறிமுகப்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 4 ஆண்டு ஆசிரியர் படிப்பில் கணிதம், அறிவியல், சமூகஅறிவியல், மானுடவியல், ஆசிரியர் பணி சார்ந்த பிற படிப்புகளில் உள்ள பாடங்கள் இடம்பெறும்.

எழுத்துத்தேர்வு, செய்முறை தேர்வுக்கு இடையேயான இடைவெளியை குறைக்கும் வகையில் பாடப்பிரிவுகள் அதில் இடம்பெற்றிருக்கும். இதன்மூலம் ஆசிரியர் பணிக்கு தகுதிவாய்ந்த நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் இந்த ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி படிப்பை நடத்தலாம். இந்த படிப்புக்கான வழிமுறைகளை பின்பற்றி, கட்டமைப்புகளை உருவாக்கி விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு இந்த படிப்பை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும். இவ்வாறு மத்திய அரசின் அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: