பலத்த சூறைக்காற்றுக்கு 5 ஆயிரம் வாழை நாசம்'

திருச்சுழி: திருச்சுழி அருகே வீசிய பலத்த சூறைக்காற்றுக்கு 5 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் கவலையடைந்துள்ள விவசாயிகள் இழப்பீடு கோரி உள்ளனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே திருமலைபுரம், பரளச்சி, செங்குளம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழை தோட்டங்கள் அதிகமாக உள்ளன. கடந்த சில நாட்களாக திருச்சுழி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், அக்னி வெயில் வாட்டி வதைத்து வந்தது.

நேற்று பலத்த சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்தது. இக்காற்றினால் திருமலைபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வாழைத்தோட்டங்கள், பசுமை குடில்கள் பலத்த சேதமடைந்தன. குறிப்பாக, திருமலைபுரத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம், முத்துமாரி, கணேசமூர்த்தி ஆகிய விவசாயிகளுக்கு சொந்தமான வாழைத்தோட்டத்தில் 5,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சூறாவளி காற்றில் சாய்ந்து விழுந்தன. சில வாரங்களில் வாழைத்தார்களை அறுவடை செய்து லாபம் கொடுக்க வேண்டிய நேரத்தில் வாழை மரங்கள் சாய்ந்தது, விவசாயிகள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடும் வறட்சி காலத்திலும் பெரும் சிரமப்பட்டு வளர்த்த வாழை மரம் முற்றிலும் சாய்ந்து சேதமடைந்ததால் தாங்கள் மிகவும் மன வேதனை அடைந்ததாகவும், இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர். மேலும், இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட விவசாயி மணிமுத்துவின் பசுமை குடிலும் சூறைக்காற்றால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. வாழை மரங்கள் மற்றும் பசுமைக்குடில் சேதத்தை மதிப்பீடு செய்து உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டுமென விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: