ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரை எரிவாயு குழாய் பதிப்பதற்கு நிலம் கையகப்படுத்த தடை: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

மதுரை, மே 16: ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரை எரிவாயு குழாய் பதிப்பதற்காக நிலங்களை கையகப்படுத்தும் மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த செல்லம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடி மாவட்டம், தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்தில் சிப்காட் அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் அரசால் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டது. இதுதவிர காற்றாலை அமைக்கவும், ரயில் பாதைக்காகவும் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. அரசு திட்டங்களுக்காக மட்டும் இந்தப் பகுதியில் இதுவரை சுமார் 1,500 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களை கையகப்படுத்தியுள்ளனர்.

சிப்காட்டிற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை இதுவரை பயன்படுத்தாமல் காலியாகவே வைத்துள்ளனர். இந்நிலையில் இந்தியன் ஆயில் கழக அதிகாரிகள் கடந்த மே 6ல் தெற்கு வீரபாண்டியபுரத்தைச் சேர்ந்த விவசாயிகளிடம், சில ஆவணங்களில் கையெழுத்து போட்டு விட்டு இழப்பீடு பெற்றுக்கொள்ளுமாறும் கூறியுள்ளனர். இதுகுறித்து விசாரித்தபோது, தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக், ஸ்டெர்லைட் உள்ளிட்ட சில தொழிற்சாலைகளுக்கு எரிவாயு விநியோகம் செய்வதற்காக பூமிக்கடியில் குழாய்கள் பதித்து கொண்டு செல்லும் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு குழாய் மூலம் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் செய்ய, ₹700 கோடி மதிப்பீட்டில் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். ஆறு, கால்வாய்கள், சாலைகள், வனம், பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பகுதிகள் மற்றும் சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலய பகுதிகளில் குழாய்களை அமைக்க உள்ளனர். இதற்காக எண்ணூர் - திருவள்ளூர் - பெங்களூரு - புதுச்சேரி - நாகை - மதுரை - தூத்துக்குடி தடத்தில் குழாய்கள் பதித்து, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்கு முறை வாரியத்திடம் அனுமதி பெற்றுள்ளனர். ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரையிலான பகுதி இந்த தடத்தில் இல்லை. முறையான அனுமதியின்றி குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். எனவே, ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு குழாய் பதிப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த ஏற்கனவே வெளியான இரு அறிவிப்பாணைகளை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எம்.தண்டபாணி ஆகியோர், எரிவாயு கொண்டு செல்வதற்காக நிலங்களை கையகப்படுத்துவதற்கான மத்திய அரசின் அறிவிப்புகளுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை செயலர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்கு முறை வாரிய செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related Stories: