தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன்-6ல் தொடங்குகிறது: மருத்துவக்கல்வி இயக்குனரகம்

சென்னை: தமிழகத்தில் ஜூன் 6 முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஜூன் 5-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதால், ஜூன் 6ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. www.tn.health.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்கள் மூலம் எம்பிபிஎஸ் படிப்பில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புகளுக்காக, தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக்கல்லூரிகளில் 3,000 இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களும், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களும், கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் 150 இடங்களும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன.

அதேபோல, தமிழகத்தில் உள்ள 15 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 1,207 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து பிடிஎஸ் மருத்துவ பிரிவில், 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 1,045 இடங்கள் அரசின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 26ம் தேதி முதற்கட்ட கலந்தாய்வு தொடங்க இருப்பதாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது. அரசாணை வெளியான பிறகே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு செய்யப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ கூறியுள்ளார்.

Related Stories: