பாஜக நிர்வாகி பிரியங்கா சர்மாவை உடனே விடுவிக்காத மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி : பாஜக நிர்வாகி பிரியங்கா சர்மாவை உடனே விடுவிக்காத மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி பிரியங்கா சர்மாவிற்கு உச்சநீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற மெட்காலா நிகழ்வில் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, அவரது கணவர் நிக் ஜோனஸூடன் கலந்துகொண்டார். வித்தியாசமான ஹேர் ஸ்டைல், அதன் மீது கிரீடம், மினுமினுக்கும் ஆடை, கண்கள் ஓரம் பளபளக்கும் மேக்கப் என முழுவதுமாக மாறி வந்த பிரியங்கா சோப்ராவின் புகைப்படத்தை பலரும் கலாய்த்தனர். அதனை விமர்சித்து பல்வேறு மீம்ஸ் போட்டு வந்தனர்.

இந்நிலையில் மேற்குவங்கத்தின் ஹவ்ரா மாவட்ட பெண் பாஜக நிர்வாகியான பிரியங்கா சர்மா, அந்த புகைப்படத்தில் இருந்த பிரியங்கா சோப்ராவின் முகத்தை மறைத்துவிட்டு அதில் அம்மாநில முதல்வர் மம்தான் பானர்ஜியின் முகத்தை கிராபிக்ஸ் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிரியங்கா சர்மாவிற்கு எதிராக பல்வேறு நபர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதையடுத்து பிரியங்கா சர்மா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவரை ஜாமினில் விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேற்குவங்க பாஜக மனு தாக்கல் செய்தது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடம் நிபந்தனையற்ற எழுத்துப்பூர்வமான மன்னிப்பு கடிதத்தை பிரியங்கா சர்மா வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் நீதிமன்றம் ஜாமீன் தந்த பிறகும் பிரியங்காவை உடனே விடுவிக்கவில்லை என பாஜக இளைஞரணி நிர்வாகி பிரியங்கா சர்மா தரப்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் மேற்கு வங்க முதல்வரை விமர்சிக்க மாட்டேன் என மன்னிப்பு கடிதம் தர போலீஸ் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த புகாரை விசாரித்த நீதிபதி, மேற்கு வங்க அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரும் பிரியங்கா சர்மாவின் மனு ஜூலையில் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மம்தா பானர்ஜியின் மார்ஃபிங் செய்த படத்தை பதிவிட்டதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என பிரியங்கா சர்மா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: