கத்திரி வெயிலை சமாளிக்க நெல்லையப்பர் கோயில் யானைக்கு தினமும் இருமுறை ஷவர் குளியல்

நெல்லை :  கத்திரி வெயிலை சமாளிக்க நெல்லையப்பர் கோயில் காந்திமதி யானை தினமும் இருமுறை ஷவரில் குளிக்க வைக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் இந்தாண்டு கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைக்கிறது. கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து 100 டிகிரி அளவுக்கு வெப்பம் பதிவாகி வந்தது. அக்னி நட்சத்திரம் துவங்கியதும், கத்திரி வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. பெரும்பாலான நகரங்களில் கடந்த ஒரு வாரமாக வெயில் பதிவு தினமும் 105 டிகிரி என்றாகி விட்டது.

தொடர்ந்து 2 மாதங்களாக வெயில் சுட்டெரிப்பதால் மனிதர்கள் மட்டுமின்றி தாவரங்கள், விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நெல்லை டவுனில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் உள்ள காந்திமதி யானையும், கோடை வெயிலுக்கு தப்பவில்லை.  இந்த யானையை தினமும் தாமிரபரணி ஆற்றுக்கு அழைத்து சென்று குளிப்பாட்டி வந்தனர். தற்போது ஆற்றில் யானை படுத்து குளிக்கும் அளவிற்கு கூட தண்ணீர் ஓடவில்லை. இதனால் கோடை வெயிலை எதிர்கொள்ள யானையை கோயிலிலேயே குளிப்பாட்டுகின்றனர்.

கோயிலின் வெளிப்பிரகாரத்திலுள்ள யானை நிலையம் அருகே யானைக்காக சிறப்பு ஷவர் பாத் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 10 ஷவர்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இதன் கீழ் யானையை நிறுத்தி தண்ணீரை திறந்து விட்டு காந்திமதி யானையை குளிப்பாட்டுகின்றனர். மேலும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் யானையை குளிர்விக்கின்றனர்.

இதுகுறித்து யானை பாகன் ராம்தாஸ் கூறுகையில், யானையை படுக்க வைத்து குளிப்பாட்டும் அளவிற்கு ஆற்றில் தண்ணீர் இல்லாததால் தற்போது கோயில் ஷவரிலேயே யானையை குளிப்பாட்டுகிறோம், தினமும் இருமுறை அரை மணி நேரத்திற்கு குறையாமல் ஷவர் மூலம் குளிக்கிறது. இந்த  ஷவர் குளியல் காந்திமதி யானைக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுக்கிறது. மேலும் யானை நிற்கும் இடத்தில் கூடுதல் மின்விசிறிகளும் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் கோடைக்கு ஏற்ற உணவுகளும் வழங்கப்படுகின்றன. தினமும் அதிகாலை கஜபூஜை, சுவாமிக்கு தீர்த்த நீர் எடுத்து வருதல், ரதவீதியில் உலா, கோயில் உள் வீதியில் தினமும் 5 முறை உலா போன்ற பணிவிடைகள் செய்யப்படுகின்றன. சமீபத்தில் யானை முகாமிற்கு சென்று திரும்பிய பிறகு கூடுதல் உற்சாகத்தில் காந்திமதி யானை உள்ளது. மாதம் ஒரு முறை மருத்துவ பரிசோதனையும் தொடர்கிறது என்றார். கோயிலில் யானை ஷவர் குளியல் போடும் நேரத்தில் வரும் பக்தர்கள், சிறுவர்கள் அதனை ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.

Related Stories: