300 நோயாளிகளை கொன்ற நர்ஸ் உலகின் மாபெரும் ‘சீரியல் கில்லர்’: ஜெர்மனியை உலுக்கிய சம்பவம்

ஓல்டன்பர்க்: ஜெர்மனியைச் சேர்ந்த ஆண் நர்ஸ் ஒருவர், சிகிச்சைக்காக வந்த 300 நோயாளிகளை கொன்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தகவல் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் உலகிலேயே மிகப்பெரிய சீரியல் கில்லர் இவராகத்தான் இருப்பார் என போலீசார் கூறி உள்ளனர். ஜெர்மனியின் டெல்மன்ஹார்ஸ்ட் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் நர்ஸாக பணியாற்றியவர் நீல்ஸ் ஹோகல் (42). கடந்த 2000ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் அந்த மருத்துவமனையில் பணியாற்றி உள்ளார். இவரது பராமரிப்பின் கீழ் இருந்த சில நோயாளிகள் அடுத்தடுத்து இறந்துள்ளனர். ஆனாலும், அவசர சிகிச்சைப்பிரிவு என்பதால் இந்த விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகத்திற்கோ, இறந்தவர்களின் உறவினர்களுக்கோ பெரிய அளவில் சந்தேகம் ஏற்படவில்லை.

கடந்த 2006ல் ஐசியு.வில் புதிதாக சேர்ந்த மற்றொரு ஆண் நர்ஸ் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவர் தந்த தகவலைத் தொடர்ந்துதான், நீல்ஸ் ஹோகல் நோயாளிகளை கொலை செய்திருப்பது தெரிய வந்தது. 2006ல் நீல்ஸ் ஹோகல் கைது செய்யப்பட்டார். முதலில் 2 நோயாளிகளை கொன்றது தொடர்பான வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பின் மேலும் 4 நோயாளிகளை கொன்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

தற்போது நீல்ஸ் சுமார் 130 நோயாளிகளை தனது பணிக்காலத்தில் கொன்றிருப்பதாக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதோடு, 300 நோயாளிகள் வரை நீல்ஸ் கொன்றிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் கூறியிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில், 43 பேரை கொன்றதாக நீல்ஸ் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், மற்ற 52 பேரை கொன்ற குற்றச்சாட்டை அவர் மறுக்கவில்லை என்றும், 5 பேர் கொல்லப்பட்டதை மறுத்திருப்பதாகவும் அதிகாரிகள் கூறி உள்ளனர். ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக் காலத்தில் இருந்த நாஜி படையினர்தான் மக்களை கும்பல் கும்பலாக கொன்று குவித்தனர். நாஜிக்களுக்குப் பிறகு அந்நாட்டில் அதிகளவில் தொடர் கொலை செய்த சீரியல் கில்லர் நீல்ஸ் ஹோல்சாகத்தான் இருப்பார் எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் ஜெர்மனியை உலுக்கி உள்ளது. 300 நோயாளிகளை கொல்லும் வரை யாருக்கும் எந்த சந்தேகமும் வராமல் இருந்தது எப்படி என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.

Related Stories: