நீட் தேர்வு முடிவு வெளியானபின் மருத்துவம் படிக்க விண்ணப்பம்: மருத்துவக்கல்வி இயக்குனர் தகவல்

சென்னை: நீட் தேர்வு முடிவு வெளியான நாளிலோ அல்லது அதன்பின்னர் தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் கவுன்சலிங்குக்கு விண்ணப்பித்தல் தொடங்கும் என மருத்துக்கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறினார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு மே 5ம் தேதி பிற்பகலில் நடந்தது. தமிழகத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் உள்பட நாடு முழுவதும் 15 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 14 நகரங்களில் 108 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. ஜூன் 5ம் தேதி நீட் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவக்கல்லூரி இடங்களுக்கு எப்போது கவுன்சலிங் நடைபெறும் என்று மருத்துவக்கல்வி இயக்குனர் எட்வின் ஜோவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை கவுன்சலிங்குக்கான பணிகள் நடந்து வருகிறது.

இதுதொடர்பாக தமிழக அரசிடம் ஒப்புதல் கேட்டுள்ளோம். நீட் தேர்வு முடிவு வெளியாவதற்கு முன், எம்பிபிஎஸ், பிடிஎஸ் கவுன்சலிங்க்கு நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. நீட் தேர்வு முடிவு வெளியானபின், விண்ணப்பித்தலை தொடங்கினால், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிப்பார்கள். இது மாணவர்களிடையே தேவையற்ற சிரமத்தை குறைக்கும். அதனால் நீட் தேர்வு முடிவு வெளியான நாளிலோ அல்லது அதன்பின் தமிழகத்தில் எம்பிபிஎஸ்/பிடிஎஸ் கவுன்சலிங்குக்கு இணையதளத்தில் விண்ணப்பித்தலை தொடங்க உள்ளோம். இவ்வாறு மருத்துவக்கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறினார்.

Related Stories: