குட்கா முறைகேடு வழக்கு தேர்தல் டிஜிபியிடம் சிபிஐ விசாரணை: மேலும் பல அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு

சென்னை: குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக தற்போதைய தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம், சிபிஐ அதிகாரிகள் சென்னையில் விசாரணை நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அருகே உள்ள ஒரு குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் சில ஆண்டுகளுக்கு முன் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு டைரியை கைப்பற்றினர். அதில், போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை அமைச்சர், மாநகராட்சி அதிகாரிகள், மத்திய கலால்துறை என்று பல துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ₹45 கோடி வரை மாமூல் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு, அப்போதைய வருமான வரித்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியிருந்தார். அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர் இந்த விவகாரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ டெல்லி அதிகாரிகளைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில், தற்போதைய டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் 2 ஐஜிக்கள், டிஐஜிக்கள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் திடீரென்று இந்த வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. மேற்கொண்டு எந்த விசாரணையும் செய்யப்படாமல் இருந்தது. ஆளும் கட்சியான அதிமுகவின் வேண்டுகோளுக்காக இந்த வழக்கை மத்திய அரசு கிடப்பில் போட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர். இந்தநிலையில் திடீர் திருப்பமாக தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் சிபிஐ அதிகாரிகள் சென்னையில் இரு நாட்களுக்கு முன் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர். இந்த விசாரணை ரகசியமாக வைக்கப்பட்டது. சென்னையில் தேர்தல் நேரத்தில் கமிஷனராக அசுதோஷ் சுக்லா இருந்தார். அவர் இருந்த காலத்தில் குட்கா விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரது பெயரில் சில அதிகாரிகள் மாமூல் வாங்கியுள்ளனர். இதனால், உண்மையில் இந்த மாமூலை வாங்கியது யார், அது உங்களுக்குத் தெரியுமா என்பது குறித்து அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசரணை நடத்தியுள்ளனர். இது போலீஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விசாரணையைத் தொடர்ந்து, மேலும் பல போலீஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: