நெல்லை அருகே கார் கவிழ்ந்து சென்னை போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் தந்தை பலி

நாங்குநேரி: நெல்லை அருகே சென்டர் மீடியனில் மோதி கார் கவிழ்ந்ததில், சென்னை போலீஸ் இணை கமிஷனரின் தந்தை பலியானார்.கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அடுத்துள்ள சீதப்பால் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினசபாபதி (67). ஓய்வுபெற்ற ரயில்வே டிக்கெட் பரிசோதகர். ஊர் தலைவராகவும் இருந்து வந்தார். இவரது மனைவி ரத்னா (65). இவர்களது மகன் சுதாகர்  சென்னையில் போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக பணியாற்றி வருகிறார். மற்றொரு மகன் அருண் பிரசாத்(35), சென்னையில் கிரானைட் வியாபாரம் செய்து வருகிறார். ரத்தினசபாபதி குடும்பத்தினர் சென்னையில் வசித்து வருகின்றனர். ஊர் தலைவர் பொறுப்பு வகித்து வருவதால் அவர் அடிக்கடி சொந்த ஊர் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் கோயில் விழாவுக்காக ரத்தினசபாபதி, மகன் அருண் பிரசாத், அவரது மனைவி பிரவீணா (29), குழந்தை லியா (2), உறவினர் ரமேஷ் (28) ஆகியோர் காரில் சீதப்பாலுக்கு புறப்பட்டு வந்தனர். காரை அருண்பிரசாத் ஓட்டி வந்தார்.

நேற்று அதிகாலை 4 மணியளவில் நெல்லையை அடுத்த மூன்றடைப்பு நான்கு வழிச்சாலையில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த ரத்தினசபாபதி சம்பவ இடத்திலேயே பலியானார்.  காயமடைந்த கணவன், மனைவி உள்ளிட்ட 4 பேரும் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: