பொது குழாய்களில் தண்ணீர் திருட்டு 20 வீடுகளின் இணைப்பு துண்டிப்பு

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி 12வது மண்டலத்துக்கு உட்பட்ட ஆலந்தூர்,  ஆதம்பாக்கம் போன்ற பகுதிகளில் 3 நாட்களுக்கு ஒருமுறை பொது குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், பல இடங்களில் குழாய்களில் குறைவான அளவு தண்ணீர் விநியோகிக்கப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. இதையடுத்து ஆலந்தூர் குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் விஜயகுமாரி உத்தரவின்பேரில் குடிநீர் வாரிய உதவி பொறியாளர் தனசேகரன் மற்றும் குடிநீர் வாரிய ஊழியர்கள்  ஆலந்தூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்போது 20க்கும் மேற்பட்ட வீடுகளில் குழாய்களில் இருந்து வரும் குடிநீரை, மின் மோட்டார் மூலம் உறிஞ்சி தொட்டிகளில் சேமிப்பது தெரிந்தது. பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய குடிநீரை ஒரு சிலர் தங்களது சுயலாபத்துக்கு பயன்படுத்தி வந்ததால் அந்த 20 வீடுகளின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. தொடர்ந்து இதுபோன்ற குடிநீர் திருட்டில் ஈடுபட்டால் மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படும் என குடிநீர் வாரிய அதிகாரிகள் எச்சரித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: