துரத்தும் வறுமை, தொடரும் பாலியல் கொடுமையால் பாதுகாப்பு என்ற பெயரில் குழந்தை திருமணங்கள் அரங்கேறும் அவலம்: மலைகிராமங்களில் அபாயம்...ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்

சேலம்: தமிழக மலைகிராமங்களில் வறுமை, பாலியல் தொல்லைகளில் இருந்து விடுபடவே, சமீப காலமாக குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருகிறது என்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.  தமிழகத்தில் 20ஆண்டுகளுக்கு முன்பு பெண் சிசுக்கொலை என்பது பெரும் கொடுமையாக இருந்தது. இதையடுத்து தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட தொட்டில் குழந்தைகள் திட்டம் இதற்கு ஓரளவு தீர்வாக அமைந்தது.  இதற்கடுத்து நவீனயுகத்தில் கருவிலேயே பெண் சிசுக்களை கண்டறிந்து கொல்லும் அவலம் அரங்கேறத் தொடங்கியது. இந்த நிலையும் தமிழக அரசு கொண்டு வந்த சட்டங்கள், பெண்களுக்கான நலஉதவிகள், தாலிக்கு தங்கம்  வழங்கும் திட்டம் போன்றவற்றால் சற்று மாறியது. அதே நேரத்தில் தொடரும் குழந்தை திருமண அவலங்கள் மட்டும் கட்டுக்குள் வராதது பெண்ணிய ஆர்வலர்களை ேவதனையில் ஆழ்த்தியுள்ளது.

இதில் குறிப்பாக தமிழகத்தை பொறுத்தமட்டில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர்,  பெரம்பலூர் மலைகிராமங்களில் தொடரும் வறுமை, பாலியல் கொடுமைகளால் இந்த கொடூரம் நேர்வது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.  சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தேன்கனிக்கோட்டை மலைப்பகுதியில் அடுத்தடுத்து அதிகாரிகளால் நிறுத்தப்பட்ட குழந்தை திருமணங்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளது. இதில் ேபாச்சம்பள்ளியை அடுத்த மத்தூரில்  16வயது சிறுமி ஒருவர், கலெக்டரிடம் போனில் பேசி, தன்னை தற்காத்துக் கொண்ட சம்பவம் சற்று ஆறுதல் அளித்துள்ளது.  இது குறித்து மலைகிராமங்களில் ஆய்வு நடத்திய விழிப்புணர்வு குழுவினர் கூறியதாவது: கல்வியறிவில்லாத மலைகிராமங்களில் குழந்தை திருமணத்தை நடத்தி வைக்கும் கொடுமை தொடர்ந்து அரங்கேறி  வருகிறது. குழந்தை திருமணத்துக்கு இவர்கள் முக்கிய காரணமாக  கூறுவது வறுமை, போதிய கல்வி  அறிவில்லாமை, பெண் குழந்தைகளை குடும்ப  சுமையாக கருதுவது போன்றவை தான். அதே போல் ெபற்றோர் பிழைப்பு தேடி வெளியூருக்கு போகும் போது உள்ளூரில் யாரிடமாவது பெண் குழந்தைகளை ஒப்படைத்தால்  பாலியல் தொல்லைகளுக்கும் ஆட்படுவர் என்பதும் பிரதான எண்ணமாக உள்ளது.

இதற்கெல்லாம் பூப்பெய்தியவுடன் ெபண் குழந்தைகளுக்கு திருமணத்ைத முடிக்க வேண்டும் என்பதே இது போன்ற கிராமங்களில் வாழும் ஒட்டு  மொத்த பெற்றோரின் எண்ண ஓட்டமாக உள்ளது. அதேநேரத்தில் இதுபோன்ற திருமணங்களால், பெண் குழந்தைகளின் கல்வி தடைபடும். தன்னம்பிக்கை குறையும். அடிக்கடி கருவுறுதல், கருக்கலைவால் சத்து  பற்றாக்குறை ஏற்படும். இளம் வயதில் கர்ப்பப்பை முழு  வளர்ச்சியில்லாமல் போகும். பிரசவத்தின்போது தாய், சேய் மரணம் நிகழும். எடை குறைவாக, ஊனமுற்று குழந்தை  பிறக்கும். ரத்தசோகை, உடல், மனம் பலவீனமடையும். நோய் மற்றும் வறுமைக்கு  வழிவகுக்கும். குடும்பத்தை வழிநடத்த முடியாமல்,  குழந்தைகள் பணிக்கு  செல்லும் நிலை ஏற்படும். குடும்ப பிரச்னையை எதிர்கொள்ள முடியாமல்,  தற்கொலைக்கு ஆளாவர். அவர்களது குழந்தைகள் அனாதைகளாக சாலையில் திரியும்  நிலை உருவாகும் என்ற  விழிப்புணர்வு  ெகாஞ்சமும் இல்லை.  

தற்போதைய நிலையில், பெண் பிறப்பு தடுக்கப்படுவதால்  ஆண், பெண் எண்ணிக்கையில் வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருமண வயதுடைய ஆண்களுக்கு,  பெண்கள் கிடைக்காத சூழலும் உள்ளது. இளம்  வயது திருமணத்தை தவிர்க்க, பல்வேறு  சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் மேலும்  குழந்தை திருமணங்களை தடுக்க, பெண்  குழந்தைகளின் மேற்படிப்புக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். இளம் வயது திருமண  பாதிப்புகள் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  பெண்ணுக்கு சொத்தில் சமபங்கு அளித்தல், ஆணுக்கு நிகராக பெண்களுக்கும்  மதிப்பு, மரியாதை வழங்குதல் போன்றவற்றால்  மட்டுமே தொடரும் குழந்தை திருமண அவலத்திற்கு தீர்வு காணமுடியும். இவ்வாறு ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: