பானி புயலையொட்டி நிவாரணப்பணி மேற்கொள்ள தமிழகம், விசாகப்பட்டினத்தில் தயார் நிலையில் 8 மீட்பு குழுக்கள்: கடலோர காவல்படை ஐஜி தகவல்

சென்னை: பானி புயலையொட்டி நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழகம் மற்றும் விசாகப்பட்டினத்தில் 8 மீட்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு பிராந்திய கடலோர காவல் படை ஐஜி தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள பானி புயல் இன்று மதியம் ஒடிசாவில் கரையை கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஒடிசாவின் கோபால்புர் மற்றும் சந்தபாலி இடையே கரையை கடக்கும் போது மணிக்கு 200 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பானி புயலை எதிர் கொள்ளவும் நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் கடலோர காவல் படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கிழக்கு பிராந்திய கடலோர காவல் படை ஐஜி பரமேஷ் கூறியதாவது: தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில அரசுடன் இணைந்து நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ளும் வகையில் கடலோர காவல் படை தயார் நிலையில் உள்ளது. ஏப். 25ம் தேதி முதல் கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் மீனவர்களுக்கு புயல் தொடர்பான அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

விசாகப்பட்டினம் மற்றும் சென்னையில் தலா 4 மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. இதேபோன்று விசாகப்பட்டினம் மற்றும் சென்னை கடலோரங்களில் 2 கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகளை மேற்கொள்ள விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  

இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: