2 இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யுங்கள்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்

சென்னை: திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டி இரண்டு இடங்களில் வாக்காளர் அடையாள  அட்டை வைத்துள்ளார். இதை மறைத்துவிட்டு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவரது வேட்புமனுவை நிராகரித்து தகுதி நீக்கம்  செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை சந்தித்து மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:

மே 19ம் தேதி திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 4 தொகுதிகளில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையும் முடிவடைந்துள்ளது. 4 தொகுதிகளில் ஆளும் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்யும்போது தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறும்பட்சத்தில் அவர்களை தகுதிநீக்கம் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு.

வேட்பாளராக போட்டியிடும் ஒருவர் தனது வேட்பு மனு தாக்கலின்போது வாக்காளர் அடையாள அட்டையையும் இணைக்க வேண்டும். அதே நேரத்தில் வேட்பாளர் இரண்டு இடங்களில் சேர்த்து இரு வாக்காளர் அடையாள அட்டையை பெற்றிருந்தால் அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டியது கடமையாகிறது. தற்போது திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முனியாண்டி இரு இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

வேட்பு மனு தாக்கலின்போது உண்மையை மறைத்து ஒரே இடத்தில் மட்டும் குறிப்பிட்டு வாக்காளர் அடையாள அட்டையுடன் நகலை இணைத்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.இது அப்பட்டமான தேர்தல் விதிமீறலாகும்.

ஆகவே, திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் முனியாண்டி வேட்பு மனுவை நிராகரித்து அவரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: