தகுதி தேர்வில் வெற்றிபெறாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது: அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னை: அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்களை பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆசிரியர் தேர்வு எழுதாத ஆசிரியர்களுக்கு 2 வாரங்களில் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் இந்திரா காந்தி உள்ளிட்ட நான்கு ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 2019ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை தங்களை பணிநீக்கம் செய்ய தடை விதிக்க  கூடாது என்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாத காரணத்தைக் கூறி, தங்களை பணிநீக்கம் செய்ய தடை விதிக்க  வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வக்கீல், மத்திய அரசின் சர்வ சிக் ஷா அபியான் திட்டத்தின்படியும், கல்வி உரிமைச் சட்டத்தின்படியும், 2011 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  அதன்படி, 2012, 2013, 2014, 2017ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. நடப்பாண்டு இந்த தேர்வு நடத்தப்படவுள்ளது.  ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்க மார்ச் 31ம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் வழங்கியது. அதன் பின் காலக்கெடுவை நீட்டிக்க மறுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாதவர்களை பணியில் நீடிக்க அனுமதிக்க முடியாது எனக் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் தீர்ப்பில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு 2 வாரங்களில் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். நோட்டீசுக்கு பதிலளிக்க 10 நாட்கள் அவகாசம் வழங்கி, அவர்களின் பதிலைப் பெற்று, சட்டப்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஏற்கனவே எட்டு ஆண்டுகள் அவகாசம் வழங்கியும், தகுதித் தேர்வு முடிக்காதவர்களுக்கு எந்த கருணையும் காட்ட முடியாது. பத்தாம் வகுப்பு தேர்ச்சியடையாத மாணவரை 11ம் வகுப்பில் சேர்க்க முடியுமா?. ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்து 60 ஆயிரம் பேர் வேலைக்காக காத்திருப்பதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தகுதித் தேர்வு எழுதி 60 ஆயிரம் பேர் வேலைக்காக காத்திருக்கும் நிலையில், தகுதி தேர்வு எழுதாதவர்கள் பணியில் நீடிக்க அனுமதிப்பதில் எந்த காரணமும் இல்லை.அதேபோல, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு மார்ச் 31ம் தேதிக்கு பின் ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்திற்கான ஊதியத்தை வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: