நன்றியுள்ள ஜீவன் எஜமானை கொத்த வந்த பாம்பை கடித்து குதறி உயிரை விட்ட நாய்

தஞ்சை: தஞ்சை அருகே தோட்டத்தில் எஜமானை கடிக்க வந்த பாம்பை  வளர்ப்பு நாய் கடித்து குதறி இறந்தது அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியது.தஞ்சை அருகே வேங்கராயன்குடிகாடு நடுத்தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் (50). விவசாயி. இவரை கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பப்பி என்ற ஆண் நாயை வளர்த்து வந்தார். பப்பியை தனது குடும்பத்தில் ஒருவராகவே வளர்ந்து வந்தனர்.  வீட்டுக்குள்ளும், வெளியிலும் பப்பி உட்காருவதற்கென்றே தனியாக நாற்காலி உண்டு. காவல் காப்பதிலும் பப்பி படுசுட்டி. தினமும் காலை நடராஜன் பப்பியுடன் தனது தோட்டத்துக்கு நடை பயிற்சி செல்வது வழக்கம். நேற்றும் வழக்கம்போல் பப்பியை அழைத்துக்கொண்டு நடராஜன் தோட்டத்துக்கு சென்றார். நடராஜன் முன்னே செல்ல பப்பி பின்னே வந்தது. அப்போது, 5 அடி நீளமுள்ள நல்லபாம்பு தோட்டத்தில் இருந்து வந்தது. அதனை பார்த்த நடராஜன் அதிர்ச்சியில் அப்படியே நின்றார்.

பாம்பு நடராஜனை கடிப்பதற்காக சீறியுள்ளது. எஜமானை சீறுவதை பார்த்த பப்பி பாய்ந்து சென்று பாம்பை கடித்தது. இதில் நாய்க்கும் பாம்புக்கும் இடையே கடும் சண்டை நடந்துள்ளது.  நடராஜன் வீட்டுக்கு சென்று பெரிய குச்சியை எடுத்து வந்து பாம்பை அடிப்பதற்காக ஓடினார். ஆனால் பாம்பு அருகிலிருந்து முட்புதருக்குள் மறைந்து கொண்டது. விடாமல் துரத்தி சென்ற பப்பி புதருக்குள் ்இருந்த பாம்பை கவ்விபிடித்து வெளியில் கொண்டுவந்து கடித்து குதறியது. இதில் பாம்பு இறந்தது. இதைபார்த்து வியந்த நடராஜன் நாயை பாம்பு கடித்தது தெரியாமல் கட்டியணைத்து தூக்கிவந்து வீட்டில் உள்ளவர்களிடம் நடந்ததை கூறினார்.

ஆனால் சிறிது நேரத்திலே பப்பி சோர்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நடராஜன், குடும்பத்தினர், உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் சிறிது நேரத்திலே பப்பி நாய் இறந்தது. இதனை கண்ட நடராஜன் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுதனர். பின்னர் இறந்து போன நாயையும், பாம்பையும் குழி தோண்டி புதைத்தனர். பாம்பிடம், உயிரை கொடுத்து எஜமானை காப்பாற்றிய நாயை அப்பகுதியினர் வந்து பார்த்து சென்றனர். நன்றி உள்ள ஜீவன் நாய் என்பது இதுதான் மக்கள் வியந்த வண்ணம் சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: