நான்குவழிச்சாலையில் முக்கிய நகரங்களை புறக்கணித்து செல்லும் அரசு விரைவு பஸ்கள்

காரியாபட்டி : நான்குவழிச்சாலையில் உள்ள முக்கிய ஊர்களை விரைவு பஸ்கள் புறக்கணிப்பதால், பயணிகள் அவதிப்படுகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் காரியாபட்டி, அருப்புக்கோட்டை ஆகிய நகர்களும், திருநெல்வேலி நான்குவழிச்சலையில் விருதுநகர், சாத்தூர் ஆகிய நகர்களும், கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய நகர்களும் உள்ளன. இந்த நகரங்களின் வழியாக தினசரி விரைவு பஸ்கள் சென்று வருகின்றன.

மதுரையில் இருந்து தூத்துக்குடி வழியாக திருச்செந்தூர் செல்லும் பஸ்கள் காரியாபட்டி, அருப்புக்கோட்டையில் நின்று செல்வதில்லை. இது தெரியாத பயணிகள் பஸ்சுக்காக காத்துக் கிடக்கின்றனர். நெல்லை செல்லும் பஸ்கள் விருதுநகருக்குள் செல்வதில்லை. அங்குள்ள பழைய, புதிய பஸ்நிலையங்களை புறக்கணிக்கின்றன. திருவில்லிபுத்தூர் பஸ்நிலையத்திற்குள் செல்லாமல் சில பஸ்கள் சர்ச் நிறுத்தத்தில் நின்று செல்கின்றன. இதனால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.

காரியாபட்டி, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பொதுமக்கள், திருச்செந்தூர் உள்ளிட்ட முக்கிய கோயில் ஸ்தலங்களுக்கு செல்ல, மதுரைக்கு சென்று அங்கிருந்து திருச்செந்தூர் செல்கின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி, நான்குவழிச்சாலையில் உள்ள ஊர்களில் விரைவு பஸ்கள் நின்று செல்ல, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் அம்மாசி கூறியதாவது: நான்குவழிச்சாலையில் உள்ள முக்கிய ஊர்களை விரைவு பஸ்கள் புறக்கணிக்கின்றன. இது தொடர்பாக மண்டல போக்குவரத்து மேலாளரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. பைபாஸ் ரைடர், பாய்ண்ட் டூ பாயிண்ட், எக்ஸ்பிரஸ் என ஒட்டி செல்கின்றனர். கட்டணமும் அதிகமாக வசூலிக்கின்றனர். ஆனால், காரியாபட்டி உள்ளிட்ட ஊர்களில் நிறுத்தி செல்வதில்லை. எனவே, நான்குவழிச்சாலையில் உள்ள முக்கிய ஊர்களில் விரைவு பஸ்கள் நின்று செல்ல வேண்டும்’ என்றார்.

விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் மலைச்சாமி கூறுகையில், ‘காரியாபட்டி நகருக்குள் விரைவு பஸ்கள் வந்து செல்வதில்லை. இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதனால், மதுரை, அருப்புக்கோட்டை ஆகிய நகரங்களுக்கு சென்று வெளியூர் செல்கின்றனர். பொதுமக்களின் போக்குவரத்து குறைவால் நகரில் வியாபாரமும் நடப்பதில்லை. மேலும், காலியான பஸ்களை ஓட்டிச் செல்வதால், போக்குவரத்து துறைக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, நான்குவழிச்சாலையில் உள்ள ஊர்களின் பொதுமக்கள் நலன் கருதி, விரைவு பஸ்கள் நின்று செல்ல சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: