துபாய் பாரில் ஆட வைத்து பணம் சம்பாதிக்கிறார்; என் அம்மாவால் உயிருக்கு ஆபத்து; பெண் இன்ஸ்பெக்டர் மீது மகள் குற்றச்சாட்டு

சென்னை: துபாயில் உள்ள பாரில் ஆட வைத்து என் அம்மா பணம் சம்பாதித்து வருகிறார். அங்கு செல்லமாட்டேன் என்று கூறுவதால், என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என சிபிசிஐடி பெண் இன்ஸ்பெக்டர் மீது அவரது மகளே குற்றம்சாட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை செயின்ட் தாமஸ் மவுண்டில் சிபிசிஐடி பெண் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ஆர்.விஜயலட்சுமியின் மகள் கேண்டி ஸ்வாரிஸ் என்பவர், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எனது தாயார் ஆர்.விஜயலட்சுமி, செயின்ட் தாமஸ் மவுண்டில் சிபிசிஐடி இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். எனது தந்தை பெயர் பெட்ரம் ஸ்வாரிஸ்.

இருவரும் என்னை வற்புறுத்தி ஒரு வருடமாக துபாயில் உள்ள ஒரு பாரில் நடனம் ஆட வைத்து பணம் சம்பாதித்து வந்தனர். எனக்கு இதில் உடன்பாடு இல்லை. இதனால், நான் அங்கிருந்து திரும்பி வந்து என்னுடைய அண்ணன் வீட்டில் தங்கியுள்ளேன். இந்நிலையில், கடந்த 23ம் தேதி ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த என்னை என்னுடைய அம்மா, அப்பா இருவரும் ஆட்டோவில் அடியாட்களுடன் வந்து வழிமறித்து அடித்து துன்புறுத்தினர். அப்போது, அருகில் இருந்தவர்கள் என்னை மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து, நான் சூளைமேடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

என்னுடைய அம்மா இன்ஸ்பெக்டர் என்பதால் புகார் எடுக்கவும், நடவடிக்கை எடுக்கவும் பயப்படுகிறார்கள். நீதிமன்றம் சென்றாலோ, கமிஷனரிடம் சென்றாலோ, சரி நீ எங்கு சென்று புகார் கொடுத்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது எனக்கூறி என்னை மிரட்டுகிறார். இதனால், யாரிடம் சென்று புகார் கொடுப்பது என்று தெரியாமல் இருக்கிறேன். பணம் மட்டுமே குறிக்கோளாக வைத்து என்னை துன்புறுத்துகிறார்கள். யார், யாரோ எங்களின் வீட்டிற்கு வந்து லட்சக்கணக்கில் பணம் கொடுத்துவிட்டு செல்கிறார்கள். எனக்கு மிகவும் பயமாக உள்ளது.

எனது அண்ணனின் தொழிலையும் முழுமையாக முடக்கியுள்ளார். என் அண்ணனிடமும் பணம் கேட்டு மிரட்டுகிறார். ரூ.50 லட்சம் கொடுத்தால் உங்களை விட்டுவிடுகிறேன் என்று கூறுகிறார். இதுவரை 5 முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், நான் வெளியில் செல்ல முடியவில்லை. எப்போது என்னுடைய உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரியவில்லை. எனவே, என்னுடைய அம்மாவான சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் ஆர்.விஜயலட்சுமியை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். எங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களை வாழவிட்டாலே போதும். இவ்வாறு கூறினார். சிபிசிஐடி பெண் இன்ஸ்பெக்டர் மீது அவரது மகளே குற்றம் சாட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: