தேர்தல் நடத்தை விதிமுறையால் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் முடங்கியிருக்கும் புதிய பஸ்கள்

* தொழிலாளர்கள் வேதனை

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அரசு போக்குவரத்து கழக மண்டலத்துக்கு வழங்கப்பட்ட 27 அரசு பஸ்கள், தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக இயக்கப்படாமல் ஒரு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பழைய பஸ்களுக்கு மாற்றாக, புதிய பஸ்கள் படிப்படியாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, திருவண்ணாமலை அரசு போக்குவரத்து கழக மண்டலத்துக்கு கடந்த மார்ச் முதல் வாரத்தில் 27 பஸ்கள் வழங்கப்பட்டன.

புதிய பஸ்களை சென்னை உள்ளிட்ட தொலைதூர நகரங்களுக்கு செல்லும் பழைய பஸ்களுக்கு மாற்றாக வழங்க திட்டமிடப்பட்டது. அதையொட்டி, விழா நடத்தி பஸ்களை இயக்க அதிகாரிகள் திட்டமிட்டனர். ஆனால், கடந்த மாதம் 10ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. எனவே, உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அரசு விழாக்கள் நடத்தவும், புதிய திட்டங்களை அறிவிக்கவும் தடை விதிக்கப்பட்டது.

எனவே, அரசு போக்குவரத்து கழக திருவண்ணாமலை மண்டலத்துக்கு வழங்கப்பட்ட 27 பஸ்களும், பதிவு எண்கள் இல்லாமல் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்களை தொடர்ந்து பயன்படுத்தாமல், ஒரே இடத்தில் நிறுத்தி வைத்தால் அதன் ஆயுட் காலம் குறையும், இயந்திர பாகங்கள் பழுதாகும் என போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேதனைப்படுகின்றனர்.

புதிய வழித்தடங்களில் அரசு பஸ்களை இயக்குவதற்கும், விழா நடத்துவதற்கும்தான் தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள வழித்தடங்களில், பழைய பஸ்களை மாற்றிவிட்டு, புதிய பஸ்களை இயக்குவதற்கு எந்த தடையும் இல்லை என கூறப்படுகிறது. எனவே, தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலை பெற்று உடனடியாக புதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் பழைய அரசு பஸ்களில், போக்குவரத்துக் கழகம் நிர்ணயிக்கும் டீசல் சிக்கனத்தை கடைபிடிக்க முடியாமல் ஊழியர்கள் தவிக்கின்றனர். பழைய பஸ்களின் பராமரிப்பும் முறையாக இல்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் இந்த மாத இறுதி வரை அமலில் இருப்பதால், அதுவரை புதிய பஸ்களை தொடர்ந்து ஒரே இடத்தில் நிறுத்தி வைப்பது அவசியமற்றது என தொழிலாளர்கள் கருதுகின்றனர். எனவே, புதிய பஸ்களை இயக்க வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: