சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் விவசாயிகள் விருப்பத்திற்கு எதிராக அரசு நடந்தால் தொடர் போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

தஞ்சை: சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக விவசாயிகள் விருப்பத்துக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் நடந்தால் தொடர் போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. தஞ்சையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

உயர் நீதிமன்ற தீர்ப்பை உதாசீனப்படுத்தும் வகையில் கடந்த 15ம் தேதி சேலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் சென்னை- சேலம் 8 வழி சாலை திட்டத்தை திட்டமிட்டவாறு அமைத்தே தீருவோம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. எனவே தமிழக அரசு, உயர் நீதிமன்ற தீர்ப்பை மதித்து நடந்து கொள்ள வேண்டும். மேல்முறையீடு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது.

விவசாயிகளின் விருப்பத்திற்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் நடந்து கொண்டால் தொடர் போராட்டம் நடத்துவோம். இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக வரும் 28ம் தேதி திருவண்ணாமலையில் 8 வழிச்சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், இந்த வழக்கை நடத்திய வக்கீல்கள், நீதிபதி சிவசுப்ரமணியம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் சிறப்பு கருத்தரங்கம் 8 வழிச்சாலை எதிர்ப்பு கூட்டியக்கத்தின் சார்பில் நடக்கிறது. இவ்வாறு சண்முகம் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: