அதிமுகவினர் கள்ள ஓட்டு போட்டதால் வாக்குப்பதிவு மையத்தை எதிர்க்கட்சிகள் முற்றுகை

* ஆவடி அருகே நள்ளிரவு பரபரப்பு

* மறுதேர்தல் நடத்த கோரிக்கை

ஆவடி: ஆவடி அருகே மேட்டுப்பாளையம் கிராமத்தில் கள்ள ஓட்டு போட்ட அதிமுகவினரை கண்டித்தும், அங்கு மறுதேர்தல் நடத்த கோரிக்கை விடுத்தும் திமுக உள்பட  எதிர்க்கட்சியினர் நள்ளிரவில்  வாக்குப்பதிவு மையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் 6 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆவடி கன்னப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் கிராமத்தில் நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி  இடைத்தேர்தல் மற்றும் திருவள்ளூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.இந்த மையத்தில் வாக்குப்பதிவு முடிந்ததும், அமமுக பூத் ஏஜென்ட் உள்ளே சென்றபோது அதிமுகவை சேர்ந்த சிலர் கள்ள ஓட்டு போட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து  மற்றவர்களுக்கு தெரியப்படுத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த திமுக, அமமுகவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் இரவு 8 மணியளவில் வாக்குப்பதிவு மையத்தை முற்றுகையிட்டனர்.தகவலறிந்து போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மேட்டுப்பாளையம் கிராமத்தில் 1,117 வாக்குகள் உள்ளன.  இதில் 858 வாக்குகள் பதிவானதாக அனைத்து கட்சி பூத் ஏஜென்டுகளும் ஒப்புக்ெகாண்டு வெளியே வந்தனர்.அதன் பிறகு அதிமுகவை பிரமுகர் வாக்குப்பதிவு மையத்துக்குள் சென்று, பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு 37 வாக்குகளும், திருவள்ளூர் மக்களவை தொகுதிக்கு 27  வாக்குகளும் கூடுதலாக போட்டுள்ளதாக தெரிகிறது. இதை அறிந்த பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி சம்பவ இடத்திற்கு வந்தார். இதனால் அங்கு  பரபரப்பு கூடியது.

இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட துணை தேர்தல் அதிகாரியும் சப்-கலெக்டருமான ரத்னா தலைமையில் தேர்தல் பிரிவு உயரதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை  மேற்கொண்டனர்.விசாரணையில் அந்த மையத்தின் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கூடுதல் வாக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது. எனவே எதிர்க்கட்சிகள் மறுதேர்தல் நடத்த வேண்டும் என  வலியுறுத்தினர். மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுக்கவிடாமல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு சப்-கலெக்டர் ரத்னா, ‘‘மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான மகேஸ்வரி ரவிக்குமாரிடம் கூடுதல் ஓட்டுகள் குறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’  என உறுதியளித்தார். இதனை ஏற்ற எதிர்க்கட்சியினர் நள்ளிரவு 2 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன்பிறகு அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரத்தை சீல் வைத்து  அங்கிருந்து எடுத்து சென்றனர். ஆவடி அருகே அதிமுகவினர் கள்ள ஓட்டு போட்ட பிரச்சனையால் நள்ளிரவு 6 மணி நேரம் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தியது பரபரப்பை  ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: