ஆலந்தூர் தாசில்தார் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் பொருத்தம்: கலெக்டர் பொன்னையா பங்கேற்பு

ஆலந்தூர் : ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற  தொகுதிக்கு உட்பட்ட ஆலந்தூர் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் பொருத்தும்  பணி நேற்று துவங்கியது. ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற  தொகுதியில் பெரும்புதூர், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், மதுரவாயல், அம்பத்தூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஸ்ரீபெரும்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் 20 லட்சத்து, 84 ஆயிரத்து 231 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 10 லட்சத்து 42 ஆயிரத்து 891 ஆண் வாக்காளர்களும்,  10 லட்சத்து 41 ஆயிரத்து 94 பெண் வாக்காளர்களும், 246 பேர் மற்றவர்களும் உள்ளனர். இந்த நாடாளுமன்ற   தேர்தல் களத்தில்  திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு, அதிமுக கூட்டணியின் பாமக வேட்பாளர்  வைத்திலிங்கம்,  அமமுக வேட்பாளர்  தாம்பரம் நாராயணன், மக்கள் நீதி மய்யம் சார்பாக தர் மற்றும் சுயேட்சைகள்  உள்பட 19 பேர்  போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களின்  இறுதிப்பட்டியல் தயாரான நிலையில், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலந்தூர் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பட்டியல் பொருத்தும் பணி ஆலந்தூரில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் நேற்று துவங்கியது.

இதில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கலந்துகொண்டு ஓட்டு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் ஒட்டும் பணியை துவக்கி வைத்தார். மேலும், தேர்தல் பணியில் ஈடுபடும்  அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அதேபோல் தாம்பரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கிழக்கு தாம்பரம் சேலையூர் அரசு மேல்நிலை பள்ளியில் வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் ஒட்டும் பணிகள் நேற்று நடந்தது. வழக்கமாக காலை 11 மணிக்கு துவங்க வேண்டிய பணிகள் மாலை 3 மணிக்கு தான் துவங்கியது. இதனால் இரவு 10 மணிக்குள் முடிக்கப்பட வேண்டிய பணிகள் அதிகாலை 1 மணிவரை நீடிக்கும் என சின்னம் ஓட்டும் பணிகளுக்காக வந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: