செம்பரம்பாக்கம், சோழவரத்தில் தண்ணீர் எடுப்பது நிறுத்தம் பூண்டி, புழல் ஏரியில் இருக்கும் நீரை நம்பி இருக்கும் குடிநீர் வாரியம்: மாற்றுத்திட்டத்தை செயல்படுத்த பொதுப்பணித்துறை அறிவுரை

சென்னை: செம்பரம்பாக்கம், சோழவரத்தில் தண்ணீர் எடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பூண்டி, புழல் ஏரியில் இருக்கும் நீரை நம்பி குடிநீர் வாரியம் உள்ளதால் மாற்றுத்திட்டத்தை செயல்படுத்த பொதுப்பணித்துறை அறிவுரை வழங்கியுள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. 11 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த ஏரிகள் வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் நீரை தான் நம்பி உள்ளது. இந்த நிலையில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவை காட்டிலும் குறைவாக பெய்தது. இதனால், ஏரிகளில் நீர்மட்டம் எதிர்பார்த்த அளவு உயரவில்லை.

இதை தொடர்ந்து சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நீர் திறந்து விட வேண்டும் என்று ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இதையேற்று ஆந்திர அரசு தண்ணீர் திறந்து விட்டது. 1 டிஎம்சியாவது ஆந்திரா தரும் என்று எதிர்பார்த்த நிலையில் 379 மில்லியன் கன அடி (0.37 டிஎம்சி) மட்டுமே வழங்கியது. இதனால், சென்னை மாநகர மக்களுக்கு ஏரிகளில் இருந்து தொடர்ந்து குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 220 மில்லியன் லிட்டர் மட்டுமே நான்கு ஏரிகளில் இருந்து விநியோக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஏரிகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்ததால், மோட்டார் மூலம் நீரை உறிஞ்சி முழுமையாக எடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 4 ஏரிகளில் 0.61 டிஎம்சி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதில், பூண்டியில் 319 மில்லியன் கன அடி, புழலில் 283 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரி வறண்டு வருகிறது. அங்கு சேறும், சகதியுமாக தண்ணீர் வருகிறது. இதனால், அங்கிருந்து தண்ணீர் எடுப்பதும் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது பூண்டி, புழலில் இருந்து மட்டுமே குடிநீருக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. இன்னும் 8 நாட்கள் மட்டுமே அந்த ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுக்க முடியும் என்பதால், மாற்றுத்திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை குடிநீர் வாரியத்திற்கு அறிவுரை வழங்கியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: