கிருஷ்ணகிரி அருகே ஒரே இடத்தில் இரண்டு மாதங்களாக காத்திருக்கும் பிரம்மாண்ட பெருமாள் சிலை: வனத்துறை அனுமதி கிடைக்காததால் மாற்று ஏற்பாடு

சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சாமல்பள்ளத்தில் பிரம்மாண்ட பெருமாள் சிலை சுமார் 2 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டையில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட பெருமாள் சிலை, பெங்களூரு ஈஜிபுரா எனுமிடத்தில் பீடத்துடன் இணைத்து 108 அடி உயரத்தில் நிறுவ திட்டமிடப்பட்டது. இதற்காக 64  அடி உயரம், 24 அடி அகலம் கொண்ட பெருமாள் சிலையை ராட்சத லாரியில் ஏற்றிக்கொண்டு கடந்த டிசம்பர் மாதம் 7ம் தேதி புறப்பட்டனர்.

வழியில் பல்வேறு தடைகளை தாண்டி, கடந்த ஜனவரி 16ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையை வந்தடைந்தது. அங்கிருந்து ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரியை கடந்து பிப்ரவரி 9ம் தேதி  கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாமல்பள்ளம் என்னுமிடத்தை அடைந்தது. அங்குள்ள சிறு பாலத்தை கடப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் பெருமாள் சிலையுடன் லாரி நிறுத்தப்பட்டது.

இப்பகுதியில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் சின்னாறு பாலம், இதையடுத்து, சென்னப்பள்ளி, கொல்லப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் சிறு சிறு பாலங்கள் உள்ளன. இதனை தவிர்ப்பதற்காக வனப்பகுதியில் சிலை  பயணத்திற்கு முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், வனத்துறை அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்படவே, சாமல்பள்ளத்தில் இருந்து புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சிலையை லாரியில் ஏற்றி புறப்பட்டு சுமார் 4 மாதமாகியும்  குறிப்பிட்ட இடத்திற்கு சென்றடைய முடியாமல் ஏற்பட்டாளர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். சாமல்பள்ளத்தில் சுமார் இரண்டு மாதமாக பெருமாள் சிலை நிறுத்தப்பட்டிருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சிலை பயணத்திற்கு வசதியாக பேரண்டப்பள்ளி என்னுமிடத்தில் தென்பெண்ணை ஆற்றில் தரைப்பாலம் அமைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்காக ஆற்றில் செல்லும் தண்ணீரை திருப்பி விட்டுள்ளனர்.  மேலும், குழாய்களை பதித்து அதற்கு மேல் மண் கொட்டி தற்காலிகமாக பாலம் போடும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி நிறைவடைந்ததும் இம்மாத இறுதியில் சாமல்பள்ளத்தில் இருந்து பிரம்மாண்ட பெருமாள் சிலை  புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: