தாம்பரம் அருகே வேனில் கொண்டு சென்ற 375 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல்

சென்னை : தாம்பரம் அருகே உரிய அனுமதியின்றி மினி வேனில் எடுத்து செல்லப்பட்ட 375 கிலோ வெடி மருந்துகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். நாடு முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட தங்க நகைகள், பொருட்கள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் பணமும் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், தாம்பரத்தில் மினி வேனில் கொண்டு வரப்பட்ட 375 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாம்பரம்-சோமங்கலம் சாலையில் உள்ள எட்டையபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர், தனி வட்டாட்சியர் ரமணி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் தலா 25 கிலோ எடை கொண்ட 15 பெட்டிகளில் 375 கிலோ எடையுள்ள வெடி மருந்துகள் இருப்பது தெரியவந்தது. அந்த வெடி மருந்துகளை கைப்பற்றிய பறக்கும் படையினர் அவற்றை சோமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து வேன் ஓட்டுநர் குன்றத்தூர் லாரன்ஸ் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய சோதனையில், கல்குவாரிகளில் வெடி வைக்க பயன்படுத்தும் 90 ஜெல் என்ற வெடி மருந்துகள் என்று கூறியுள்ளார். தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கிடங்கில் இருந்து நாகலாபுரம் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு எடுத்து செல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சோமங்கலம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: